ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே நான்காம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 54வது போட்டியில் லக்னோவை 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 7 வெற்றிகளைப் பெற்ற பஞ்சாப் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபுறம் 11 போட்டிகளில் 6வது தோல்வியை சந்தித்த லக்னோ பிளே ஆஃப் செல்ல எஞ்சிய 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடம் ரிஷப் பண்ட் 27 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு லக்னோ கேப்டனாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே அசத்தாத அவர் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்தார். அதைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் மோசமாக விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
சேவாக் 2 அட்வைஸ்:
குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முக்கிய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து லக்னோ 27/3 என தடுமாறியது. அப்போது பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தடுமாற்றமாக 18 (17) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதை விட பௌண்டரி அடிக்க முயற்சித்த அவருடைய பேட் கையை விட்டு வெளியேறி உயரே பறந்தது.
மறுபுறம் பேட்டில் பட்ட பந்து கேட்ச்சாக மாறி அவருடைய விக்கெட்டை பறித்தது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் வெறும் 128 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறும் ரிஷப் பண்ட்க்கு ஜாம்பவான் வீரேந்தர் சேவாக் 2 ஆலோசனைகளை கொடுத்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் ரன்கள் அடித்த தன்னுடைய பழைய வீடியோக்களைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்”
தோனியிடம் பேசுங்க:
“அது அவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். நிறைய நேரங்களில் நாம் நம்முடைய வழக்கமான செயல்முறைகளை மறந்து விடுவோம். இந்த ரிஷப் பண்ட் காயத்துக்கு முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டு மோசமாகத் தெரிகிறார். 2006/07இல் தடுமாறிய போது நான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேன்”
இதையும் படிங்க: வங்கதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷாண்டோ விலகல் – அடுத்த 2 ஆண்டுகளுக்கான புதிய கேப்டன் அறிவிப்பு
“அப்போது நீங்கள் ரன்கள் அடித்த போது செய்த விஷயங்களை இப்போது மீண்டும் பார்த்து செயல்படுங்கள் என்று ராகுல் டிராவிட் என்னிடம் சொன்னார். சில நேரங்களில் உங்களுடைய வழக்கமான செயல்முறைகளில் தொல்லைகள் இருந்தால் ரன்களில் பிரச்சனை ஏற்படும். இது போன்ற நேரங்களில் ரிஷப் பண்ட் தன்னுடைய ஃபோனை எடுத்து யாரிடமாவது பேச வேண்டும். எதிர்மறையாக சிந்தித்தால் அது பற்றி விவாதிக்க நிறைய கிரிக்கெட்டர்கள் இருக்கின்றனர். தோனி அவருடைய ரோல் மாடல். எனவே ரிஷப் பண்ட் அவரை அழைத்து பேசினால் பாரம் குறையும்” என்று கூறினார்.



