அதே அதிரடி பேட்டிங் ஸ்டைல், கிரிக்கெட்டில் கால் தடம் பதித்த குட்டி விரேந்தர் சேவாக் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Virender Sehwag Son
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தன்னுடைய தனித்துவமான பேட்டிங் ஸ்டைலால் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார். தொடக்க வீரரான அவர் பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அதிரடி சரவெடியாக ரன்களை குவித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் ஸ்டைலை கொண்டவர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட எப்போதுமே பொறுமையை கையாளத அவர் அதிரடியாக விளையாடிய காரணத்தாலேயே 2 முச்சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

அந்தளவுக்கு அலுப்பு தட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை விரும்பி பார்க்க வைத்த அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை காட்டியவர் என்றே சொல்லலாம். அந்த வகையில் மிகச்சிறந்த ஜாம்பவானான அவர் ஓய்வுக்குப்பின் பின் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் நிலையில் அவருடைய 2 மகன்களில் மூத்த மகனான ஆர்யவீர் சேவாக் அவரைப் போலவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

- Advertisement -

அதே ஸ்டைல்:
சமீப காலங்களில் பள்ளி அளவில் சிறப்பாக செயல்பட்டதால் 2022 – 23 சீசனுக்கான விஜய் மெர்சென்ட் கோப்பை உள்ளூர் தொடருக்கான டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்ட 79 இளம் வீரர்களில் அவரது பெயரும் ஒன்றாக இருந்தது. கடந்த நவம்பர் 25ஆம் தேதியன்று அந்த பட்டியலில் இடம் பிடித்த 79 வீரர்களை முதல் கட்டமாக பயிற்சி போட்டியில் விளையாட வைத்து டெல்லி மாநில வாரியம் சோதனைகளை நடத்தியது. அதில் ஆர்யவீர் சேவாக் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் தற்போது நடைபெற்று வரும் விஜய் மெர்ச்சன்ட் கோப்பையில் பங்கேற்கும் டெல்லி அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பாக டிசம்பர் 6ஆம் தேதியான்று நடைபெற்ற பீகார் அணிக்கு எதிரான டெல்லியின் முதல் போட்டியில் விளையாடும் 11 பேர் அணியில் இடம் பிடிக்கா விட்டாலும் 15 பேர் கொண்ட முதன்மை அணியில் ஆரியவீர் இடம் பெற்றுள்ளார். அந்த மாநில வாரியம் வெளியிட்டுள்ள அந்த அணி பட்டியலில் இடம் பிடித்துள்ள அவரது பெயர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இருப்பினும் வீரேந்திர சேவாக் போல அவரது மகன் அதிரடியாக விளையாடுவதில்லை என்று டெல்லி மாநில வாரியாக தேர்வுக்குழு தலைவர் ஆகாஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தமக்கு இயற்கையாக வரும் ஸ்டைலில் தற்போது விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் தற்சமயத்தில் பெரிய ரன்களை குவிக்காத போதிலும் நல்ல ஃபுட் ஒர்க், நடு பேட்டில் அடிப்பது அம்சங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் சேவாக் போன்ற பேட்ஸ்மேன் கிடையாது. இருப்பினும் அவருடைய புட் வொர்க் சிறப்பாக உள்ளது. அவர் தற்போது கிரிக்கெட்டின் மாணவனாக உள்ளார். அவர் பந்தை நடு பேட்டில் கச்சிதமாக அடிக்கிறார். அவருடைய ஃபுட் வொர்க் சரியாக இருப்பதுடன் அவர் நிறைய ஷாட்களை வி (நேர்) திசையில் அடிக்கிறார். அது தான் எங்களை கவர்ந்துள்ளது” என்று கூறினார்.

அந்த வகையில் பயிற்சிகளை எடுத்து வரும் ஆரியவீர் சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அவர் விளையாடுவதை பார்க்கும் போது அதிரடியாக இல்லை என்றாலும் பேட்டிங் ஸ்டேன்ஸ், ஸ்டைல் போன்ற அம்சங்கள் வீரேந்திர சேவாக் போலவே உள்ளது. அந்த வகையில் தற்போது அண்டர்-16 அளவில் கால் தடை பதித்துள்ள அவர் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வருங்காலங்களில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் அசத்துவார் என்ற நம்பிக்கை தீவிர வீரேந்திர சேவாக் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement