IPL 2023 : இப்டியே பண்ணிங்கன்னா தோனிய தடை செஞ்சுடுவாங்க – வென்றும் சிஎஸ்கே பவுலர்களை எச்சரிக்கும் சேவாக்

Sehwag
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து டாப் 4 இடத்திற்குள் முன்னேறியுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை டேவோன் கான்வே 83 (45) சிவம் துபே 52 (27) ரகானே 37 (20) என முக்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடி ரன் குவிப்பால் 20 ஓவர்களில் 226/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு விராட் கோலி 6, மஹிபால் லோம்ரர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

CSK vs RCB

இருப்பினும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை பவுலர்களை பந்தாடிய கிளன் மேக்ஸ்வெல் 76 (36) ரன்களும் கேப்டன் டு பிளேஸிஸ் 62 (33) ரன்களும் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அவர்கள் விளையாடிய போது பந்து வீச்சு துறையில் சொதப்பிய சென்னை முக்கிய கேட்ச்களை தவற விட்டதால் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் அந்த இருவரின் கேட்ச்களை ஒரு வழியாக தோனியே பிடித்ததுடன் டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் 28 (14) சபாஷ் அகமது 12 (10) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறைவான ரன்களில் அவுட்டாக்கிய சென்னை இறுதியில் போராடி வென்றது.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
இருப்பினும் இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே பந்து வீச்சு துறையில் ரன்களை வாரி வழங்குவதை விட நோபால், ஒய்ட் பந்துகளை சென்னை பவுலர்கள் வீசி வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. சொல்லப்போனால் இதே போல் நோ பால் மற்றும் ஒய்ட் பந்துகளை தொடர்ந்து வீசினால் நான் விலகி விடுவேன் நீங்கள் வேறு கேப்டன் தலைமையில் விளையாடுங்கள் என்று சென்னை பவுலர்களை தோனியே நேரடியாக எச்சரித்திருந்தார். அதனால் தேஷ்பாண்டே போன்ற பவுலர்கள் தற்போது ஓரளவு முன்னேறி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலும் இந்த போட்டியில் 6 ஓய்டு பந்துகளை வீசினார்கள்.

Dhoni

அப்படி தொடர்ந்து ஒயிட் மற்றும் நோபால் பந்துகளை வீசுவதால் 20 ஓவர்களை வீசி முடிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஓரிரு முறைக்கு மேல் அவ்வாறு நேரம் தவறி வீசினால் இறுதியில் பவுலர்கள் செய்யும் அந்த தவறுக்காக கேப்டனுக்கு தான் அபராதம் விதிக்கப்படும். அது மீண்டும் மீண்டும் தொடரும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இந்நிலையில் இதே போல ஒயிட் மற்றும் நோபால் பந்துகளை வீசினால் தோனி தடையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுமாறு சென்னை பவுலர்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எச்சரித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த போட்டியில் வென்றும் தோனி மகிழ்ச்சியற்றவராகவே இருந்தார். ஏனெனில் ஏற்கனவே அவர் தன்னுடைய பவுலர்களை ஒய்ட் மற்றும் நோபால்களை குறைத்துக் கொள்ளுமாறு எச்சரித்திருந்தார். இருப்பினும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் 3க்கும் மேற்பட்ட ஒய்ட் பந்துகளை வீசியதால் எக்ஸ்ட்ரா ஒரு ஓவர் பந்து வீச வேண்டிய நிலைமையை சந்தித்தனர். எனவே ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக தோனி தடை பெற்று தங்களுடைய கேப்டன் இல்லாமல் விளையாட வேண்டிய நிலைமையை தவிர்க்கும் அளவுக்கு சென்னை பவுலர்கள் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும்”

Sehwag

“அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே விளையாடுகிறார். குறிப்பாக ரசிகர்களுக்காகவும் சென்னைக்காகவும் அவர் முடிந்தளவுக்கு விளையாட நினைக்கிறார். ஆனால் பவுலர்களான நீங்கள் இப்படி ஒயிட் மற்றும் நோபால்களை வீசினால் பின்னர் தோனி ஓய்வெடுக்க வேண்டிய நிலைமை வரும். மேலும் முதல் நாளிலிருந்தே இம்முறை சென்னையின் பவுலிங் பலவீனமாக இருப்பதாக நான் சொல்லி வருகிறேன்”

இதையும் படிங்க:MI vs SRH : இந்த போட்டிக்கு முன்பாக என் அப்பா என்கிட்ட சொன்னது இதுதான் – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி

“அவர்கள் அந்தத் துறையில் இன்னும் உழைக்க வேண்டும். அதற்கு அவர்கள் கச்சிதமாக பந்து வீச வேண்டும். பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் 30 – 35 டாட் பந்துகளை வீசினார்கள். அதாவது பெங்களூருவுக்கு எதிராக 6 ஓவர்கள் அவர்கள் ரன்கள் கொடுக்கவில்லை. ஆனாலும் இறுதியில் அவர்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் வாயிலாக 218 ரன்கள் வாரி வழங்கினர்” என்று கூறினார்.

Advertisement