8இல் 7 தோல்வி.. ரொம்ப சாதாரண டீம் தான்.. இங்கிலாந்தின் தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக பேசிய சேவாக்

Virender Sehwag
- Advertisement -

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கே சவாலை கொடுத்து கோப்பையை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே மோசமாக தோற்ற அந்த அணி வங்கதேசத்துக்கு எதிராக வென்றதால் தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன் பின் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்து அவமானத்திற்குள்ளான இங்கிலாந்து மும்பையில் தென்னாப்பிரிக்காவிடம் சரமாரியான அடிவாங்கி மற்றுமொரு படுதோல்வியை சந்தித்தது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி மீண்டும் பெங்களூருவில் இலங்கையிடம் 156 ரன்களுக்கு சுருண்டு மோசமாக தோற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது.

- Advertisement -

சேவாக் விமர்சனம்:
இத்தனைக்கும் 2015 உலகக் கோப்பைக்குப் பின் மோர்கன் தலைமையில் அதிரடியாக விளையாடி அசால்டாக ஒருநாள் போட்டிகளில் 300 – 400 ரன்களை குவிக்கும் அணியாக உருவெடுத்த இங்கிலாந்து 2019 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று அசத்தியது. அதன் பின் மோர்கன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற ஜோஸ் பட்லர் தலைமையில் மீண்டும் அசத்திய இங்கிலாந்து 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது.

அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் – பயிற்சியாளராக பொறுப்பேற்றனர். அவர்களது தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி கடந்த 2 வருடங்களாக பெரும்பாலும் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு இதர அணிகளுக்கு முன்னோடியாக மாறி வருகிறது.

- Advertisement -

அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே மிரட்டுவதால் இந்த உலகக்கோப்பையில் கண்டிப்பாக இங்கிலாந்து செமி ஃபைனலில் இருக்கும் என்று சச்சின் உட்பட அனைத்து முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் கணித்தார்கள். ஆனால் தற்போது முதல் அணியாக லீக் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியதற்கு அடிக்கடி 11 பேர் அணியில் மாற்றங்களை செய்து டெஸ்ட் கிரிக்கெட்டை போல ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதே காரணம் என்று சேவாக் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: மொத்த வெறியையும் இங்கிலாந்து அடுத்ததா இந்தியா மேல காட்ட போறாங்க.. வேதனையிலும் மைக்கேல் வாகன் ஜாலி

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து சாதாரண அணியாகவே இருக்கிறது. சொந்த மண்ணில் நடந்த 2019 உலகக்கோப்பையை தவிர்த்து அவர்கள் கடந்த 8 உலகக் கோப்பைகளில் 7 முறை செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதில் தோல்வியடைந்துள்ளனர். நிலையான அணி இல்லாமல் அடிக்கடி மாற்றங்களை செய்யும் அவர்கள் டெஸ்ட் போட்டிகளைப் போல ஒருநாள் போட்டிகளிலும் உற்சாகமாக இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement