7 – 0 முக்கியமல்ல அதை சரியா ஹேண்டில் பண்ணனும், 2023 உ.கோ இந்தியா – பாக் போட்டியில் வெல்லப்போவது யார்? சேவாக் பதில் இதோ

Virender Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இதற்கு முன் 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற இதர நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் இந்த உலகக் கோப்பையை தங்களது நாட்டில் நடத்துகிறது. அதனால் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

அதை விட இந்த உலகக் கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வென்று மீண்டும் இந்தியா சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை குறிப்பாக உலகக் கோப்பை போட்டிகளை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக அனல் பறக்க மோதிக் கொள்வார்கள். மறுபுறம் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை அந்த போட்டியை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற வெறியுடன் தங்களது அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

வெல்லப்போவது யார்:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 1992, 1996, 1999, 2003, 2011, 2015, 2019 ஆகிய வருடங்களில் மோதிய போதெல்லாம் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா உலகக் கோப்பையில் இதுவரை ஒரு முறை கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. இருப்பினும் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் தோற்கடித்த பாகிஸ்தான் 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி நிம்மதி பெருமூச்சு விட்டது. ஆனாலும் 2022 டி20 உலக கோப்பையில் மீண்டும் விராட் கோலி சரித்திர இன்னிங்ஸ் விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்தது மறக்க முடியாததாக அமைந்தது.

இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தானிடம் தோற்காமல் 7 – 0* என முன்னிலையில் இருக்கும் இந்தியா இம்முறையும் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக விரேந்தர் சேவாக் கூறியுள்ளார். ஆனால் ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் அகமதாபாத் மைதானத்தில் நிலவும் அதிகப்படியான அழுத்தத்தை சமாளிக்கும் அணியே வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் அதை இந்தியா செய்யும் என நம்புவதாக கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் அதிகப்படியான கவனம் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தப் போட்டியின் போது நான் சமூக வலைதளத்தில் சோயப் அக்தருடன் மோதுவதற்கு தயாராக இருக்கிறேன். இந்த சமயத்தில் வரலாறு பாகிஸ்தானுக்கு எதிரான உலககோப்பை போட்டியில் இந்தியா தோற்கவில்லை என்று கூறுகிறது. குறிப்பாக 7 – 0 என முன்னிலையில் இருக்கும் நாம் ஒருமுறை மட்டுமே சேசிங் செய்துள்ளோம்”

“மற்ற போட்டிகளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து ஆரம்பத்திலேயே பெரிய ஸ்கோர் எடுத்தது. அந்த நிலையில் அக்டோபர் 15ஆம் தேதி என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அழுத்தத்தை சரியாக சமாளிக்கும் அணியே வெல்லும். அதே சமயம் அந்த அழுத்தத்தை இந்தியா சரியாக கையாளும் என்று நான் உணர்கிறேன். ஏனெனில் உலகக்கோப்பையில் இந்தியாவை நாம் தோற்கடிக்கவில்லை என்ற பாரம் பாகிஸ்தான் மீதிருக்கிறது”

இதையும் படிங்க:ஃபிட்னெஸ் இல்ல, சர்பராஸ் கான் புறக்கணிக்கப்பட காரணம் அது தான் – அதை செஞ்சா செலெக்ட் பண்ணிடுவாங்க – ப்ராட் ஹாக் பேட்டி

“மேலும் 1990களில் அவர்கள் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு வந்தனர். ஆனால் 2000க்குப்பின் அவர்களுக்கு எதிரான போட்டியில் இந்தியா அழுத்தத்தை அபாரமாக கையாண்டு வருகிறது. ஒருவேளை இவ்விரு நாடுகள் மோதும் போட்டியில் அழுத்தம் இல்லை என்று ஒரு வீரர் சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெளியில் நாம் அப்படி சொன்னாலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி உணர்ச்சிப்பூர்வமாக அதிக அழுத்தத்தைக் கொண்டது” என்று கூறினார்.

Advertisement