
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. மார்ச் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்து போராடினார்.
ஆனால் எதிர்புறம் கேப்டன் ருதுராஜ், சாம் கரண், சிவம் துபே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அப்போது 25 ரன்கள் எடுத்துப் போராடிய ஜடேஜாவுடன் தோனி களமிறங்கி அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது வந்த அஸ்வின் 11 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக வந்த தோனி 30* (16) ரன்கள் விளாசியும் 20 ஓவரில் 146-8 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை 17 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் பெங்களூருவிடம் அவமானத் தோல்வியை சந்தித்தது. மேலும் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் -1.013 என்ற மோசமான ரன்ரேட்டை பெற்ற சென்னை புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு சரிந்தது. அதனால் தோனி 9க்கு பதில் 7வது இடத்தில் பேட்டிங் செய்திருக்கலாமே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
ஏனெனில் தோனி கொஞ்சம் முன்னதாகவே களமிறங்கியிருந்தால் சென்னை 50க்கு பதில் 20 – 30 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருக்கும். அதனால் ரன்ரேட் கொஞ்சம் தப்பியிருக்கும். இந்நிலையில் இந்தப் போட்டியில் தோனி சீக்கிரமே பேட்டிங் செய்ய வந்ததாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கலாய்த்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“உண்மையில் தோனி முன்னதாகவே பேட்டிங் செய்ய வந்தார்” என்று சொல்லி சிரித்தார். அதை அருகிலிருந்து கேட்ட மற்றொரு முன்னாள் வீரர் மனோஜ் திவாரி. “இப்படியே போனால் தோனி 10வது இடத்தில் கூட பேட்டிங் செய்ய வருவார்” என்று சொல்லி சேர்ந்து கலாய்த்தார் .தொடர்ந்து பேசிய சேவாக் தோனி ஏன் 9வது இடத்தில் பேட்டிங் செய்தார் என்ற பின்னணியை பகிர்ந்தது பின்வருமாறு.
இதையும் படிங்க: தோனி செய்தது சுத்தமா பிடிக்கல.. அவரோட இந்த முடிவை நான் ஏத்துக்க மாட்டேன் – ராபின் உத்தப்பா காட்டம்
“பொதுவாக தோனி 19 – 20வது ஓவரில் தான் வருவார். ஆனால் இன்று அவர் 16வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வந்துள்ளார். எனவே அவர் வேகமாக வந்துள்ளார் அல்லவா? இது ஏற்கனவே அவரும் அவருடைய அணியும் முடிவெடுத்தது. நான் குறிப்பிட்ட பந்துகள் மட்டுமே விளையாடுவேன் என்று தோனி சொல்லி விட்டார். எனவே எனக்கு இது ஆச்சரியமில்லை. ஆர்சிபி விளையாடிய விதத்திற்கு ஒருவேளை தோனி முன்னதாகவே வந்திருந்தாலும் சென்னை வென்றிருக்காது” எனக் கூறினார்.