ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் டெல்லி நிர்ணயம் செய்த 163 ரன்கள் இலக்கைத் துரத்திய பெங்களூரு 26/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.
அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை அடித்து 51 (47) ரன்கள் எடுத்தார். அவருடன் சேர்ந்து 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ருனால் பாண்டியா 73* (47) ரன்கள் அடித்து 7வது வெற்றியை உறுதி செய்தார். அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி 99% உறுதி செய்துள்ளது.
சேஸ் மாஸ்டர் கோலி:
முன்னதாக அந்தப் போட்டியில் கடினமான பிட்ச்சில் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி கவலைப்படாமல் விளையாடி பெங்களூருவை வெற்றி பெற வைத்த விராட் கோலி தம்மை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளதாக வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் எதிர்பார்ப்பு நிகராக இல்லை”
“ஆனால் களத்தில் திடமாக நின்று விளையாடிய அவர் தம்முடைய விக்கெட் இழந்தால் புதிய பேட்ஸ்மேன்கள் வந்து சேசிங் செய்ய முடியாது என்பதை உணர்ந்து விளையாடினார். அந்த வகையில் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இல்லாவிட்டாலும் அவர் கடைசி வரை நின்று விளையாடினார். அவர் போட்டியை ஃபினிஷிங் செய்யாவிட்டாலும் ஆர்சிபி வெற்றி பெற்றது. எனவே தோல்வியை சந்திக்காத வரை ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனையில்லை”
சேவாக் பாராட்டு:
“ஒருவேளை பெங்களூரு தோல்வியை சந்தித்திருந்தால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நாம் விவாதம் செய்திருப்போம். க்ருனால் பாண்டியாவுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது. அதில் சுதந்திரமாக ரன்கள் அடித்த விராட் கோலி எதிர்புறம் பாண்டியாவும் நன்றாக விளையாட உதவி செய்தார். விராட் கோலி தம்முடைய விக்கெட்டை விடக்கூடாது என்று தெரிந்து விளையாடினார்”
இதையும் படிங்க: நானே சச்சின், தோனி ரசிகன்.. சிஎஸ்கே இந்த 2 விஷயத்தை மிஸ் பண்ணது ஏமாற்றமா இருக்கு.. அஜய் ஜடேஜா
“கடைசி வரை விளையாடினால் ரன்கள் தாமாக வரும் என்பது அவருக்கு தெரியும். டெல்லி கடைசி 5 ஓவரில் 50 – 60 ரன்கள் அடித்தது என்பது அவருக்குத் தெரியும். எனவே கடைசி வரை நின்றால் வெல்ல முடியும் என்று நினைத்து விளையாடிய விராட் கோலி இந்த காரணத்தாலேயே சேஸ் மாஸ்டர் என்று அறியப்படுகிறார். சமயம் வரும் போது அதிரடியாகவும் விளையாடிய விராட் கோலி இன்று கடினமான சேசிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்து நங்கூரமாக விளையாடுவது அவசியமாக இருந்தது” எனக் கூறினார்.



