2017இல் அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பு வந்தும் மறுத்தது ஏன்? சேவாக் விளக்கம்

Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் உலகக்கோப்பை போன்ற பெரிய வெற்றிகளை சுவைப்பதற்கு அணியின் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஒன்றிணைந்து நல்ல புரிதலுடன் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து ஒரே கோட்பாட்டில் செயல்படுவது அவசியமாகும். அந்த வகையில் இந்திய அணியில் ஜான் ரைட் – கங்குலி இடையே நல்ல புரிதல் இருந்த காரணத்தால் 2003 உலகக் கோப்பை ஃபைனல் வரை சென்ற இந்தியா கிரேக் சேப்பல் வருகையால் 2007 உலக கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனால் கேரி கிறிஸ்டனுடன் ஏற்பட்ட நல்ல புரிதல் காரணமாக 2010இல் நம்பர் ஒன் டெஸ்ட் இடம், 2011 உலக கோப்பை போன்ற நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த தோனி இந்திய கிரிக்கெட்டில் பொற்காலத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் ஜாம்பவான் வீரர் அனில் கும்ப்ளேவுக்கும் தோனிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட விராட் கோலிக்கும் பல அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. ஆரம்பத்தில் அது வெளியில் தெரியவில்லை என்றாலும் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் ஃபைனலில் தோற்ற பின் விராட் கோலியுடனான உறவு சரிவர அமையவில்லை என்பதால் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அனில் கும்ப்ளே அதிரடியாக அறிவித்தது இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் ஒரு சர்ச்சையாகவே இருந்து வருகிறது.

மறுத்த சேவாக்:
அவருக்குப்பின் பொறுப்பேற்றுக்கொண்ட ரவி சாஸ்திரியுடன் நல்ல புரிதல் இருந்த காரணத்தால் 2021 வரை உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் இருதரப்பு தொடர்களிலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி வெற்றிகரமாக செயல்பட்டார். இந்த நிலையில் அனில் கும்ப்ளேவுக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் பொறுப்பு தம்மிடம் வந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஆனால் தமது ஸ்டைலில் முழுமையாக பயிற்சிகளை கொடுக்க தாம் விரும்பும் துணை பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டுமென வைத்த நிபந்தனையை பிசிசிஐ ஏற்க மறுத்து விட்டதால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பும் தமக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டதாக கூறும் சேவாக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை தவற விட்டதற்காக நான் வருத்தமடையவில்லை. மாறாக என்ன சாதித்துள்ளேனோ அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். நஜாப்காஃர்ப் போன்ற சிறிய ஊரின் விவசாய குடும்பத்திலிருந்து வந்து இந்தியாவுக்காக விளையாடி ரசிகர்களின் அன்பை பெற்று இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட எனக்கு இப்போதும் அதே மரியாதை தான் கிடைக்கிறது. அந்த சமயத்தில் விராட் கோலி மற்றும் அமிதாப் சௌத்ரி ஆகியோர் என்னை அணுகாமல் இருந்திருந்தால் நான் அந்த பதவிக்கு விண்ணப்பித்திருக்க மாட்டேன்”

- Advertisement -

“குறிப்பாக அது பற்றி நடந்து மீட்டிங்கில் அனில் கும்பிளே மற்றும் விராட் கோலி ஆகியோருக்கிடையே எதுவும் சரிவர செல்லாததால் பயிற்சியாளர் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி கேட்டுக்கொண்டார். மேலும் 2017 சாம்பியன் டிராபியுடன் அனில் கும்ப்ளேவின் பதவி காலம் முடிவடைவதால் நீங்கள் அதன் பின் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியுடன் பயணிக்க வேண்டுமென அவர் என்னிடம் கூறினார். அதற்கு நான் ஆம் அல்லது இல்லை என எதுவும் தெரிவிக்கவில்லை”

Sehwag

“இருப்பினும் நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு செல்ல வேண்டுமெனில் முதலில் நான் விரும்பும் பேட்டிங் பயிற்சியாளர், பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர் இருக்க வேண்டும். அதாவது துணைப் பயிற்சியாளர்கள் நான் விரும்புவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினேன். இருப்பினும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று அவர்கள் தெரிவித்ததால் நானும் வெஸ்ட் இண்டீஸ்க்கு செல்லவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:34 வயதாகி விட்டதால் அதை செஞ்சா ஈஸியா சச்சினை முந்தி 100 சதங்கள் அடிக்கலாம் – விராட் கோலிக்கு அக்தர் கோரிக்கை

அதாவது தாம் விரும்பும் துணைப் பயிற்சியாளர்கள் இருந்தால் தானே முழுமையாக தாம் நினைக்கும் எண்ணத்துடன் பயிற்சி கொடுக்க முடியும் என்று நினைத்த சேவாக் அதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்காததால் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை மறுத்து விட்டதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Advertisement