நேர்மையை பற்றி நீங்க பேசலாமா – இந்தியாவை விமர்சிக்கும் இங்கிலாந்துக்கு சேவாக் முதல் ரசிகர்கள் வரை கொடுத்த 4 பதிலடி

IND vs ENG Womens
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலைமையில் 24ஆம் தேதியான நேற்று லண்டனில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 45.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 68* ரன்களும் ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 170 ரன்களை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

அதிலும் குறிப்பாக ரேணுகா சிங் 4 விக்கெட்டுகள் எடுத்ததால் 35.2 ஓவரில் 118/9 என மொத்தமாக சரிந்த அந்த அணிக்கு கடைசியில் 47 ரன்களுடன் வெற்றிக்கு போராடிய இளம் வீராங்கனை சார்லி டீன் தீப்தி சர்மா வீசிய 44வது ஓவரில் சிங்கிள் எடுப்பதற்காக வேகவேகமாக பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்புறம் கிரீஸ் விட்டு வெளியேறுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

- Advertisement -

நீங்க பேசலாமா:
அதை கவனித்த தீப்தி சர்மா 3வது பந்தில் அவரை ரன் அவுட் செய்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து 3 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. ஆனால் எதிர்பாரா வகையில் ரன் அவுட்டான சார்லி டீன் மைதானத்திலேயே கண்கலங்கி நின்றார். அதை வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் இந்தியா வென்றாலும் கிரிக்கெட் தோற்றதாக வர்ணித்தார்.

ஆரம்ப காலம் முதலே விதிமுறைக்கு உட்பட்டு மன்கட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த வகையான ரன் அவுட் நேர்மைக்கு புறம்பாக பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் பட்லரை அவுட் செய்து உலகம் முழுவதிலும் விமர்சனங்களை சந்தித்த தமிழக வீரர் அஷ்வின் தொடர்ந்து அதற்கு குரல் கொடுத்து வந்தார். அந்த நிலையில் கிரிக்கெட் விதிமுறைகள் நிர்வகிக்கும் லண்டனின் எம்சிசி அமைப்பு அவரது கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

- Advertisement -

அதை கடந்த வாரம் ஐசிசியும் ஏற்றுக்கொண்ட நிலையில் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்ட தீப்தி சர்மா நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட், சாம் பில்லிங்ஸ் உட்பட ஏராளமான இங்கிலாந்து முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் சரமாரியாகத் திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் விதிமுறையை பின்பற்றி சரியாக நடந்து கொண்ட தீப்தி சர்மாவை விமர்சிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்ற வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாசிம் ஜாபர் உட்பட ஏராளமான இந்திய பிரபலங்களும் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அதை பற்றிப் பார்ப்போம்:

1. கலாய்த்த சேவாக்: வாய்க்கு வந்ததை பேசிய இங்கிலாந்தை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் “கிரிக்கெட்டை உருவாக்கிய இங்கிலாந்து அதனுடைய விதிமுறைகளை மறந்து விடும்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு அது பற்றிய விதிமுறையை சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் ஆங்கிலேயர்கள் மோசமான தோல்வியாளர்களாக இருப்பதை பார்ப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

2. சீட்டிங் உலககோப்பை: அதைவிட வெற்றியடையாத போதிலும் தோல்வியடையாத நியூசிலாந்தை அதிக பவுண்டரிகள் அடித்தோம் என்ற முட்டாள்தனமான விதிமுறையை காட்டி 2019 உலக கோப்பையை ஏமாற்றி வென்று இங்கிலாந்து மார் தட்டுவதை விட ஐசிசி அங்கீகரித்த விதிமுறையை பின்பற்றிய தீப்தி சர்மா செய்தது நியாயமே என்று இந்திய ரசிகர்கள் நெத்தியடி பதிலை கொடுக்கிறார்கள்.

3. வெட்கமற்ற ப்ராட்: தீப்தி சர்மாவின் இந்த செயலை இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் விமர்சித்திருந்தார். அதை பார்த்த இந்திய ரசிகர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் அஸ்டன் அகர் வீசிய பந்தில் எட்ஜ் கொடுத்து அவுட்டாகியும் நடுவர் அவுட் கொடுக்காததால் வெளியேற மறுத்த வீடியோவை ஆதாரத்துடன் பதிலடியாக நீட்டினார். அதற்கு பதிலளித்த ப்ராட் என்னுடன் விளையாடிய 99% வீரர்கள் இதே செயலை செய்ததால் நானும் செய்தேன் என்று வெட்கமில்லாமல் கூறியுள்ளார்.

- Advertisement -

4. நீங்க பேசலாமா: 2008இல் ஓவலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 247 ரன்களை துரத்திய நியூசிலாந்து 217/7 என்ற நிலையில் இருந்த போது கிரேன்ட் எலியட் சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது இங்கிலாந்து பவுலர் குறுக்கே வந்து கீழே விழ வைத்ததை பயன்படுத்திய இங்கிலாந்து ரன் அவுட் செய்து அவுட் கேட்டது.

அதை சோதித்த 3வது நடுவர் குறுக்கே இங்கிலாந்து பவுலர் வந்ததால் நியூசிலாந்து பேட்ஸ்மேன் அவுட்டானார் என்பதால் அதனுடைய முடிவை இங்கிலாந்தே நிர்ணயிக்கட்டும் என்ற பதிலை கொடுத்தார்.

அதாவது நேர்மையை பின்பற்றினால் போட்டியை தொடரலாம் அல்லது அவுட் வேண்டுமானாலும் கொடுக்கிறோம் என களத்திலிருந்து நடுவர்கள் தெரிவித்தனர். அப்போது நேர்மை வேண்டாம் அவுட் வேண்டும் என கேட்டு வாங்கிய இங்கிலாந்து நேர்மைக்கு புறம்பாக வென்றதை விட தீப்தி சர்மா மோசம் செய்யவில்லை என்றும் இந்திய ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement