ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பர்ஹான் 58 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் இத்தொடரில் 2வது முறையாக இந்தியாவிடம் சந்தித்த தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.
நொறுக்கிய அபிஷேக்:
முன்னதாக அந்தப் போட்டியின் முதல் பந்திலேயே சாகின் அப்ரிடிக்கு எதிராக அபிஷேக் சர்மா அட்டகாசமான சிக்சரை பறக்க விட்டார். அதே போல ஹரிஷ் ரவூப்க்கு எதிராகவும் அதிரடியாக விளையாடிய அவர் வேகமாக ரன்கள் குவித்தார். அதனால் கடுப்பான அப்ரிடி, ரவூப் ஒரு கட்டத்தில் ஸ்லெட்ஜிங் செய்து அவரை வீழ்த்த முயற்சித்தனர்.
ஆனால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஸ்லெட்ஜிங் செய்ததால் கோபமடைந்த அபிஷேக் அவர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டு தக்க பதிலடி கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த நிலையில் “பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்வது எவ்வளவு சவாலாக இருந்தது?” என்று அபிஷேக்கிடம் போட்டியின் முடிவில் வீரேந்திர சேவாக் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்டார்.
சேவாக்கின் அட்வைஸ்:
அதற்கு சேவாக் எதிர்கொண்ட வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற தரமான பாகிஸ்தான் பவுலர்கள் அளவுக்கு ஹரிஷ் ரவூப், அப்ரிடி இல்லையென்று சேவாக்கிடம் அவர் கொடுத்த பதில் பின்வருமாறு. “வீரு பாஜி அடித்த பவுலர்களைப் போல் தற்போது யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த சேவாக் அவருக்கு கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “நீங்கள் 70 தாண்டும் போது சதத்தை தவற விடக்கூடாது”
இதையும் படிங்க: இன்றா நேற்றா? 5 வருடமும் வாஷ் அவுட்.. இந்தியா அடிக்கிறதை பாத்து வலிக்குது.. பாகிஸ்தானை சாடிய அக்ரம்
“ஏனெனில் நீங்கள் ஓய்வு பெற்ற பின் 70 – 80 ரன்கள் அடித்தது பற்றி நினைத்துப் பார்ப்பீர்கள் என்று கவாஸ்கர் என்னிடம் தெரிவித்துள்ளார். நீங்கள் அந்த ரன்களை சதங்களாக மாற்றினால் உங்களுடைய கேரியரில் இன்னும் அதிக சதங்கள் இருந்திருக்கும். அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மீண்டும் வந்து கொண்டே இருக்காது. எனவே நீங்கள் நன்றாக பேட்டிங் செய்யும் போது உங்களுடைய நாளில் அவுட்டாகாமல் இருக்க முயற்சியுங்கள்” என்று சேவாக் அறிவுறுத்தினார்.



