ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பர்ஹான் 58 ரன்கள் அடித்ததால் 10 ஓவரில் பாகிஸ்தான் 91 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைப் பெற்றது.
ஆனால் அதன் பின் நன்றாக பவுலிங் செய்த இந்திய அணி பாகிஸ்தானை 200 ரன்களை தொடவிடாமல் மடக்கி பிடித்தது. இந்திய அணிக்கு குல்தீப் யாதவ் 1, ஹர்திக் பாண்டியா 1, சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை அடித்து நொறுக்கி 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக இருந்தது.
இன்றா நேற்றா 5 வருடம்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்தனர். அதனால் 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை 2வது முறையாக வீழ்த்திய இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்தது. சொல்லப்போனால் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது.
கடைசியாக இதே துபாயில் 2021 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தது. அதை உலகக் கோப்பை வென்றது போல் கொண்டாடிய பாகிஸ்தான் அணியை 2022, 2023, 2024, 2025 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளில் இந்தியா தொடர்ந்து 7வது முறையாக தோற்கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாகவே பாகிஸ்தான் அணி 3 துறைகளிலும் இந்தியாவிடம் அடிவாங்கி படுதோல்விகளை சந்திப்பதாக முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் சாடல்:
தங்களுடைய அணி போராடாமலேயே தோற்பது பற்றி அவர் வேதனையுடன் பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய இதயத்தில் இருந்து பேசப்போகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”
இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவிடம் இருக்கும் இந்த திறமைக்கு அவர் எங்கயோ போகப்போகிறார் – ரவிச்சந்திரன் அஷ்வின் பாராட்டு
“ஆனால் இந்தியா கடந்த 4 – 5 வருடங்களாக 3 துறைகளிலும் பாகிஸ்தானை மிஞ்சி விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிராக நாம் அங்கேயும் இங்கேயும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வென்றோம். உண்மையில் இந்தியா அற்புதமாக விளையாடுகிறார்கள். அவர்களுடைய திறமை, ஆழம், மற்ற அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஒரு போட்டியில் சில கேட்ச்கள் தவற விடப்படுவது பரவாயில்லை. ஆனால் முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த உங்களால் 200 தொட முடியவில்லை என்பதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை” என்று கூறினார்.



