பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து நட்சத்திர பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளார். 2019 காலகட்டங்களில் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பாராட்டும் அளவுக்கு பாபர் அசாம் அசத்தினார். ஆனால் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்ற பின் சுமாராக விளையாடிய அவர் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அதனால் 2022, 2023, 2024 ஐசிசி தொடர்களில் ஜிம்பாவே, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளிடம் முதல் முறையாக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதற்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்ஷிப் பொறுப்பை 2 முறை பாபர் அசாம் ராஜினாமா செய்தார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
கம்பேக் அறிவுரை:
அதன் காரணமாக தற்போது நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் கழற்றி விடப்பட்டுள்ளார். ஆச்சரியப்படும் வகையில் அவரை கழற்றிவிட்டு அடுத்த போட்டியிலேயே பாகிஸ்தான் 3 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை துறந்தாலும் கடைசி வரை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாமலேயே ஃபார்முக்கு வந்தார்.
ஆனால் நீங்கள் உள்ளூரில் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடினால் தான் ஃபார்முவுக்கு திரும்ப முடியும் என்று அவருக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் வீரேந்தர் சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் மனதளவில் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள அவருடைய டெக்னிக்கில் எந்த தவறும் இல்லை என்று சேவாக் கூறியுள்ளார். இது பற்றி சோயப் அக்தர் யூடியூப் சேனலில் சேவாக் பேசியது பின்வருமாறு.
சேவாக் ஆலோசனை:
“பாபர் அசாம் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். தனது ஃபிட்னஸில் கவனம் செலுத்த வேண்டிய அவர் தன்னுடைய குடும்பத்துடன் கொஞ்சம் நேரம் செலவிட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மனதளவில் வலுவாகவும் உடலளவில் ஃபிட்டாகவும் வர வேண்டும். அவர் மீதான எதிர்பார்ப்புகள் தற்போது குறைந்துள்ளது”
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் புஜாரா அவசியம் தேவை.. ஏன் தெரியுமா? – காரணத்தை சொன்ன சோப்ரா
“கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்தார். அது அவருடைய டெக்னிக்கை விட மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எனவே அவர் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். உண்மையில் அவர் திறமையான வீரர். அவரைப் போன்ற வீரர்கள் வேகமாக மீண்டும் திரும்பி வருவார்கள்” என்று கூறினார்.



