ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு புஜாரா அவசியம் :
இந்நிலையில் இந்த டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரஞ்சி தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அனுபவ வீரரான புஜாரா இரட்டை சதம் அடித்துள்ள வேளையில் மீண்டும் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக வலுத்து வருகின்றன. ஏனெனில் புஜாரா போன்ற ஒரு அனுபவ வீரர் இருந்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இப்படி திணறியிருக்காது என்று பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் புஜாரா தேர்வு செய்யப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் எவ்வாறு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும்.
பிரிஸ்பேன், காபா போன்ற ஆடுகளங்களில் பந்துகளை உடலில் தடுத்து உடல் முழுவதும் காயத்தோடு இந்திய அணிக்காக போராடியவர் அவர். இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்களில் தற்காப்பு ஆட்டம் ஆட கூடிய வீரர்கள் இருக்கிறார்களா என்று கேட்டால் எனக்கு தெரியாது. ஆனால் புஜாரா போன்ற தற்காப்பு ஆட்டம் தேரிந்த ஒரு வீரர் இருக்கும் பட்சத்தில் அது நிச்சயம் இந்திய டெஸ்ட் அணிக்கு பலத்தை சேர்க்கும்.
தற்போது முதல் தர கிரிக்கெட்டில் பதினெட்டாவது இரட்டை சதத்தை விளாசி இருக்கும் அவர் மிகச்சிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய அணியில் புஜாரா ஒரு வித்தியாசமான வீரர். அவருடைய பேட்டிங் டெக்னிக் மற்றும் அவருடைய பார்ம் என்பது மிகச் சிறப்பான ஒன்று. என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : எதை சொன்னாலும் கேக்க மாட்றாரு.. ரஞ்சி அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்ட ப்ரித்வி ஷா – இதுதான் காரணம்
இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள புஜாரா ஆஸ்திரேலிய மைதானங்களில் மட்டும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சராசரியுடன் 993 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



