
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியையும், மூன்றாவது போட்டியில் அமெரிக்கா அணியையும் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்னும் லீக் சுற்று போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் இந்திய அணி தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில் இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் மோசமாக அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை குவித்த விராட் கோலியின் மீது இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த தொடரில் துவக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன்னிலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதோடு நடைபெற்று முடிந்த அமெரிக்கா அணிக்கெதிரான போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக கோல்டன் டக்கவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
இப்படி மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ள விராட் கோலி நிச்சயம் இனிவரும் போட்டிகளில் பாமுக்கு திரும்புவார் என்று முன்னாள் வீரர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் விராட் கோலி எப்போதுமே ஐசிசி தொடர்களின் பெரிய அளவில் ரன்களை குவிக்கும் வேளையில் இந்த தொடரில் அவரால் ரன்கள் குவிக்க முடியாததை நினைத்து ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : அவர் ஜோக் பண்ணாரு.. ஆஸ்திரேலியர்களான நாங்க இப்படி செய்வோமா.. இங்கிலாந்துக்கு ஆறுதல் சொன்ன கமின்ஸ்
மேலும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய வீரராக பார்க்கப்படும் விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலையா? என்றும் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.