இதிலும் நெருங்க முடியாத உலக சாதனையா? கிங் கோலியின் மகுடத்தில் வைரமாக ஐசிசி வழங்கிய புதிய விருது

Virat-Kohli
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நிறைவு பெற்றுள்ள சூப்பர் 12 சுற்றின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி நடை போடுவதற்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் அபாரமான செயல்பாடுகள் முழுமுதற் காரணமாக அமைந்து வருகிறது.

அதிலும் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கி பார்முக்கு திரும்பிய அவர் அதே புத்துணர்ச்சியுடன் இந்த உலகக் கோப்பையில் பழைய கிங் கோலியாக அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அதிக ரன்கள் (246*) குவித்த பேட்ஸ்மனாக சாதனை படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 31/5 என தடுமாறியதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட இந்தியாவுக்கு வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடிய அவர் 82* (53) ரன்கள் விளாசி அசாத்தியமான வெற்றியை பெற்று கொடுத்தார்.

- Advertisement -

மகுடத்தில் வைரம்:
அன்றைய நாளில் அவரது ஆட்டத்தை பார்த்து வியந்த ஒட்டுமொத்த உலகமும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுதான் மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்று மனதார பாராட்டியது. அதை விட 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக இதே உலக கோப்பையிலிருந்து அவரை அதிரடியாக நீக்க சொன்ன அதே முன்னாள் வீரர்கள் தற்போது கைதட்டி பாராட்டினார்கள். அந்த வகையில் மீண்டும் நம்பிக்கை நாயகனாக அவதரித்து நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கு தயாராகி வரும் விராட் கோலியை கடந்த அக்டோபர் மாதத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற விருதை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாகவே சர்வதேச அளவில் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய சரித்திர இன்னிங்ஸ் உட்பட கடந்த மாதம் ஆடவர் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த விருதை கொடுப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதிலும் அந்த இன்னிங்ஸை நேரடியாக கண்ணால் பார்த்து மெய் மறந்து போனதாக ஐசிசியின் இந்த மாதாந்திர விருது வழங்கும் கமிட்டியின் தலைவர் மற்றும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் கங்கா மனதார பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த விருதைப் பெற்றுக் கொண்ட விராட் கோலி மகிழ்ச்சியுடன் பேசியது பின்வருமாறு. “அக்டோபர் மாதத்தின் சிறந்த வீரராக நான் தேர்வு செய்யப்பட்டது மிகப்பெரிய கௌரவமாகும். அதிலும் உலக அளவில் கடந்த மாதத்தில் இதர வீரர்களை காட்டிலும் சிறந்தவராக ரசிகர்கள் மற்றும் கமிட்டியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் ஸ்பெஷலாகும். இந்த சமயத்தில் என்னுடன் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களுக்கும் எனது அணியில் ஆதரவு கொடுப்பவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பொதுவாகவே ஐசிசி விருதை வாங்குவது எந்த அளவுக்கு கௌரவமோ அந்தளவுக்கு அதை தொடுவதும் கடினமாகும். அதற்கு உலக அளவில் இதர வீரர்களை சாய்க்கும் வகையில் கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்த விருதையும் சேர்த்து இதுவரை வரலாற்றில் மொத்தம் 10 விருதுகளை வென்றுள்ள விராட் கோலி உலக அரங்கில் அதிக ஐசிசி விருதுகளை வென்ற வீரர் என்ற உலக சாதனையும் நெருங்க முடியாத அளவுக்கு படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 10*
2. எம்எஸ் தோனி : 4
3. குமார் சங்கக்காரா : 4
4. ஸ்டீவ் ஸ்மித் : 4

ஒவ்வொரு போட்டியிலும் உலக சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி இந்த விருது பட்டியலிலும் யாராலும் எட்ட முடியாத அளவுக்கு பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளது மற்றுமொரு ஆச்சரியமாகும். அப்படி கிரிக்கெட்டின் கிங் என்று அழைக்கப்படும் அவரது மணிமகுடத்தில் இந்த ஐசிசி விருது மற்றுமொரு சிறிய வைரமாக சேர்ந்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement