யாருமே தொட முடியாத உச்சம்.. 2023 முக்கிய ஐசிசி விருதை வென்ற கிங் கோலி.. புதிய உலக சாதனை

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் அசத்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் நிறைவு பெற்ற 2023 காலண்டர் வருடத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது. சொல்லப்போனால் கடந்த வருடம் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானித்த 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற்றது.

அதில் ஃபைனலில் சதமடித்து இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உதவிய டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருது இந்தியாவின் விராட் கோலிக்கு வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

தொட முடியாத உச்சம்:
2023 காலண்டர் வருடத்தில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி அதில் 1337 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். மேலும் 12 கேட்ச்களையும் பிடித்து சிறந்த ஃபீல்டருக்கு அடையாளமாக செயல்பட்ட அவர் 2023 உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் விளாசி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (673 ரன்கள்) சாதனையை உடைத்த விராட் கோலி புதிய உலக சாதனை படைத்தார். அத்துடன் அதே தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையும் விராட் கோலி படைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியா கோப்பையை வெல்லாவிட்டாலும் அவருடைய மகத்தான ஆட்டத்திற்கு 2023 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது பரிசாக வழங்கப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் விருதையும் விராட் கோலி வென்றுள்ளார். இதையும் சேர்த்து 2012, 2017, 2018, 2023* ஆகிய 4 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த ஐசிசி வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

இதையும் படிங்க: அப்படி என்ன அவசரம்.. 13.2 ஓவரில் மொத்த பாக்கெட்டையும் காலி செய்த இங்கிலாந்து.. முதல் நாளிலேயே ஏற்பட்ட பரிதாபம்

இதன் வாயிலாக வரலாற்றில் 4 முறை ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை வெல்லும் முதல் வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் ஏபி டீ வில்லியர்ஸ் 3 முறை வென்றதே முந்தைய சாதனையாகும். இது போக சிறந்த டெஸ்ட் வீரர், சகாப்தத்தின் சிறந்த வீரர் உட்பட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விருதையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 10 ஐசிசி விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக உலகிலேயே 10 ஐசிசி விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற யாராலும் தொட முடியாத உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். ஏனெனில் அவரை தவிர்த்து உலகில் வேறு எந்த வீரரும் 5 ஐசிசி விருதுகளை கூட வென்றதில்லை. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித், குமார் சங்ககாரா தலா 4 முறை வென்றுள்ளனர்.

Advertisement