- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தேங்க்ஸ் புஜ்ஜி.. புஜாரா இல்லனா என்னால அதை ஈஸியா செஞ்சுருக்க முடியாது.. வாழ்த்திய கிங் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ பேட்ஸ்மேன் செட்டேஸ்வர் புஜாரா அனைத்து விதமான போட்டிகளிலும் ஓய்வு பெற்றுள்ளார். 2010 – 2023 வரை இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்களை அடித்து நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2018/19 சீசனில் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல அவர் தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

அதே போல 2020/21 ஆஸ்திரேலிய தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட அவர் 2வது அதிக ரன்கள் அடித்து 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா மீண்டும் கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் சமீப காலங்களாக தடுமாறி வந்த அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு போட்டியாக நிறைய இளம் வீரர்கள் வந்துள்ளனர்.

- Advertisement -

எளிதாக்கிய புஜாரா:

எனவே வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த புஜாராவுக்கு நிறைய முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 3வது இடத்தில் நங்கூரமாக விளையாடிய புஜாரா 4வது இடத்தில் களமிறங்கிய தம்முடைய வேலையை எளிதாக்கியதாக விராட் கோலி பாராட்டியுள்ளார். அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்மால் எளிதாக பேட்டிங் செய்ய முடிந்ததாகவும் விராட் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சிறந்த கேரியரை கொண்ட புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விராட் கோலி இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “4வது இடத்தில் என்னுடைய வேலையை எளிதாக மாற்றியதற்கு நன்றி புஜ்ஜி. நீங்கள் அற்புதமான கேரியரை கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள், உங்களுக்கு முன்னோக்கி இருக்கும் விஷயங்களுக்காக வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். செட்டேஸ்ரர் புஜாரா” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

வாழ்த்திய கிங் கோலி:

அவர் கூறுவது போல பெரும்பாலான போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் அவுட்டானதும் களமிறங்கிய புஜாரா மிகவும் பொறுமையாக நங்கூரமாக அதிக பந்துகளை எதிர்கொண்டு விளையாடுவார். அப்படி விளையாடி அவர் புதிய பந்தின் பளபளப்புத் தன்மையை மாற்றி விடுவார். அது அடுத்து வரும் விராட் கோலி எளிதாக பேட்டிங் செய்வதற்கு மறைமுகமாக உதவும்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்ட அஷ்வின் – அடுத்த பிளான் என்ன?

அதை தற்போது விராட் கோலி வெளிப்படையாக சொல்லி புஜாராவின் மகத்துவத்தை பாராட்டியுள்ளார். மொத்தத்தில் ராகுல் டிராவிட்டுக்கு பின் 3வது இடத்தில் புஜாரா 10 வருடங்களுக்கு மேலாக விளையாடி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டார். அவருக்கு பின் 3வது இடத்தை தனதாக்கப் போகும் இந்திய வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -