
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாட இருக்கிறார்.
எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் முற்றிலுமாக அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் வசித்து வந்த விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே லண்டனுக்கு குடியேறி தற்போது லண்டன் வாசியாகவே மாறிவிட்டார்.
அதோடு அவரது இரண்டாவது குழந்தையும் லண்டனில் தான் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அவரது புகழ் உச்சத்தில் இருப்பதால் அவரால் எளிய வாழ்க்கையை வாழ முடியவில்லை. அதற்காகவே புகழ் வெளிச்சத்தில் இருந்து சற்று தள்ளியிருக்க நினைத்து தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அவரால் அங்கு இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்காகவே இந்த முடிவினை அவரது குடும்பத்திற்காக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது லண்டனில் வசித்து வரும் விராட் கோலி இந்திய அணி அங்கு லார்ட்ஸ் மைதானத்திலும், ஓவல் மைதானத்திலும் விளையாட இருக்கும் போட்டிகளை நேரில் காண வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளையும் அவர் மைதானத்திற்கு நேரில் வந்து பார்க்க மாட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் யாதெனில் : தற்போது லண்டனில் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவர் பொதுவெளிகளில் நடந்து செல்லும் பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியிருந்தன. ஒருவேளை லண்டனில் நடைபெறும் போட்டிக்கு அவர் நேரில் வந்து அங்கும் அவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதனாலே மைதானத்திற்கு நேரில் செல்லப்போவதில்லை என விராட் கோலி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : என்னதான் செஞ்சுரி அடிச்சாலும் விராட் கோலியின் இடத்தை கில் நிரப்புவதற்கு லேட் ஆகும் – காரணத்தை கூறிய கங்குலி
இருந்தாலும் இந்த தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், முகமது சிராஜ் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட சில வீரர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து அவர் வீட்டில் விருந்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.