
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படும் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப் பின் சிறப்பாக விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றி இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக உருவெடுத்தார். மேலும் 2014இல் ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவை அவர் கேப்டனாக 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார்.
அவரது தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா மொத்தம் 40 வெற்றிகளை பதிவு செய்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்தார். அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடினாலும் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்தார்.
மேலும் நல்ல ஃபிட்னஸ் கொண்டிருப்பதால் விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அடுத்த இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவையும் அவரையும் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் 5 – 0 (5) என்ற கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தால் விராட் கோலி ஓய்விலிருந்து மீண்டும் வந்து விளையாடுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இங்கிலாந்து தொடரில் இந்தியா 5 – 0 என்ற கணக்கில் அடித்து நொறுக்கப்பட்டால் ரசிகர்கள் விராட் கோலி ஓய்விலிருந்து மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புவார்கள்”
“இங்கிலாந்தில் படுதோல்வியை சந்தித்த பின் கேப்டன், பயிற்சியாளர், ரசிகர்கள் கேட்கும் பட்சத்தில் விராட் கோலி மீண்டும் வருவார் என்று நினைக்கிறேன். இப்போதும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆர்வம் பற்றி அவரது வார்த்தைகளில் கேட்க முடியும். இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சமாக கருதும் அவர் அதில் விளையாடப் போதுமானவராக இருக்கிறார். அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற்று தான் வேண்டும். ஆனால் இந்தியா 5 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்தில் தோற்றால் அவர் மீண்டும் விளையாட வாய்ப்பிருக்கிறது”
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியில் இதைச்செய்தால் தான் வெற்றிபெற முடியும்.. அதைத்தான் நாங்க செய்யப்போறோம் – கவுதம் கம்பீர் கருத்து
“இருப்பினும் இந்தியா அந்தளவுக்கு மோசமாக தோற்கும் என்று நான் நினைக்கவில்லை. விராட், ரோஹித் இல்லாமலேயே தற்போதைய இந்திய அணி நன்றாக இருக்கிறது. இந்தியா உணர்ச்சி வசப்படக்கூடிய நாடு. அவர்கள் இங்கிலாந்தில் வெற்றி பெற விரும்புவார்கள். ஒருவேளை அங்கே இங்கிலாந்தில் அடித்து நொறுக்கப்பட்டால் அது விராட் கோலியை ஓய்விலிருந்து வெளிவரத் தள்ளும்” என்று கூறினார்.