விராட் கோலி பாவம் – 2016 ஐபிஎல் பைனலில் நான் தான் தவறு செய்து விட்டேன், மனம் வருந்தும் நட்சத்திர வீரர்

Virat Kohli Shane watson RCB
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் விளையாடும் பெங்களூரு ஏதோ ஒரு தருணத்தில் சொதப்பி இதுவரை முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருவது அந்த அணி ரசிகர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது. 2009, 2011 ஆகிய வருடங்களில் அனில் கும்ப்ளே மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் தலைமையில் இறுதிப் போட்டி வரை சென்ற அந்த அணி கோப்பையை நெருங்கிய போதிலும் தொட முடியாமல் வெளியேறியது. அதைவிட 2016இல் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தோல்வியடைந்தது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய வலியும் வேதனையும் கொடுத்தது.

RCB

- Advertisement -

பெங்களூரு பரிதாபம்:
ஏனெனில் அந்த வருடம் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் என ஜாம்பவான் நட்சத்திரங்களைக் கொண்ட அந்த அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு ப்ளே ஆஃப் சுற்றில் அசத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. குறிப்பாக கேப்டனாக இருந்த விராட் கோலி மொத்தம் 4 சதங்கள் உட்பட 973 ரன்கள் குவித்து வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள், சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற முரட்டுத்தனமான சாதனை படைத்து பெங்களூருவின் வெற்றிக்கு வெறி கொண்ட வேங்கையாக போராடினார். ஆனாலும் பைனலில் ஹைதராபாத் அணியிடம் தோற்ற பெங்களூரு அதன் பின்னும் கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி கடந்த 2021இல் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

இருப்பினும் ஹைதெராபாத் அணிக்கு எதிரான பைனலில் பெங்களூரு தோற்ற விதம் எதிரணி ரசிகர்களை கூட பரிதாபப்பட வைத்தது. ஏனெனில் அந்த மாபெரும் பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் டேவிட் வார்னர் 69 (38) பென் கட்டிங் 39* (15) ஆகியோரின் அதிரடியில் 20 ஓவர்களில் 208/7 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய பெங்களூருவுக்கு கெயில் 76 (38) விராட் கோலி 54 (35) என அதிரடியாக ரன்களை குவித்து 114 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்தனர்.

Kohli-2

சொதப்பிய வாட்சன்:
ஆனால் அடுத்து வந்த ஏபி டிவில்லியர்ஸ் 5 (6), கேஎல் ராகுல் 11 (9) ஷேன் வாட்சன் 11 (9) ஆகிய 3 முக்கிய மிடில் ஆர்டர் வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் வெறும் 8 ரன்களில் தோற்ற பெங்களூரு கோப்பையை எதிரணிக்கு தாரை வார்த்தது. அந்த பரபரப்பான போட்டியில் முதலில் பந்து வீசிய பெங்களூருவுக்கு இதர பவுலர்கள் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய நிலையில் 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கிய ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் பேட்டிங்கில் முக்கியமான நேரத்தில் 11 ரன்னில் அவுட்டாகி சொதப்பியது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமானது.

- Advertisement -

ஆனால் அதே வாட்சன் 2018 பைனலில் அதே ஹைதராபாத்துக்கு எதிராக சதம் அடித்து சென்னை 3-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் இப்போதும்கூட வாட்சன் மீது பெங்களூரு ரசிகர்கள் சற்று கோபத்துடனேயே காணப்படுகிறார்கள். இந்நிலையில் 2016 ஐபிஎல் பைனலில் மிகச்சிறந்த வீரரான விராட் கோலி பெங்களூருவுக்காக கோப்பையை வெல்ல தவறியதற்கு தனது சுமாரான செயல்பாடு முக்கிய காரணம் என்று ஷேன் வாட்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.

watson

தற்போது டெல்லியின் பயிற்சியாளராக இருந்து வரும் அவர் இதுபற்றி மனம் வருந்தி பேசியது பின்வருமாறு.” 2016 பைனலில் பெங்களூருவுக்காக விளையாடிய போது நான் உடைந்து போனேன். ஏனெனில் இறுதிப் போட்டியில் பெங்களூரு வெல்வது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். பைனலில் நான் பெங்களூர் அணியுடன் சின்னசாமி மைதானத்தில் இருந்தேன். அந்த வருடம் குறிப்பாக இறுதி கட்டத்தில் ஆர்சிபி மிகச் சிறப்பாக விளையாடியிருந்தது. அப்போது விராட் கோலி அனலை போல் தெறித்தார். அது ஐபிஎல் கோப்பையை அவரைப் போன்ற மிகச்சிறந்த ஒருவர் வெல்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆனால் எனது பந்துவீச்சில் அந்த ஒரு ஓவர் என்னை உடைத்துப் போட்டது. அது தவறாக மாறியது. அதனால் முடிந்து போனதாக உணர்ந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது அந்த பைனலில் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்த போது கடைசி ஓவரை வீசிய வாட்சன் பென் கட்டிங்கிடம் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 23 ரன்களை வாரி வழங்கினார். ஒருவேளை அந்த ஓவரை சுமாராக வீசியிருந்தால் கூட கடைசியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றிருக்காது. எனவே தமது சுமாரான செயல்பாட்டால் விராட் கோலி கோப்பையை வெல்ல முடியாமல் போனது தம்மை உடைத்ததாக வாட்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : என்ன திமிர் ! எதுவுமே சாதிக்கல, அதற்குள் அறிவுரை வழங்கிய ஜாம்பவானை உதாசீனப்படுத்திய இளம் வீரர், ரசிகர்கள் கோபம்

மேலும் அந்த தருணத்துடன் ஒரு ஆல்ரவுண்டரான அவர் பந்து வீசுவதை அடியோடு நிறுத்தி 2018, 2019, 2020 ஆகிய ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement