
இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூஸிலாந்து தொடர் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் என அடுத்தடுத்த தொடர்களில் மோசமான தோல்வியை சந்தித்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த இரண்டு படுதோல்விகளும் இந்திய டெஸ்ட் அணியின் மீதான விமர்சனத்தையும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த டெஸ்ட் அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ஏனெனில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது 2027 வரை நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் மாற்றங்கள் அமையும் என்று கூறப்பட்டது.
மேலும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து தான் கேப்டனாக பயணிக்க விரும்புவதாக வெளிப்படையாக கூறிவிட்டதால் அவரை வலுக்கட்டாயமாக யாராலும் நீக்க முடியாது. எனவே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்காமல் தன்னை நியமிக்குமாறு பிசிசிஐ-யிடம் இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவர் கோரிக்கை வைத்ததாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்திய அணியின் சீனியர் வீரர் ஒருவர் இந்திய அணி அடுத்த டெஸ்ட் கேப்டனை நிரந்தரமாக நியமிக்கும் வரை நான் இந்திய அணியை வழி நடத்துகிறேன் தற்போதைக்கு அதுதான் சரியாக இருக்கும் எனவே எனக்கு மீண்டும் கேப்டன் பதவியை தாருங்கள் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தற்காலிக கேப்டனை நியமிக்கும் விருப்பமும், யோசனையும் எங்களிடம் தற்போது இல்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு மீண்டும் கேப்டனாக திரும்ப ஆசைப்பட்டது விராட் கோலி தான் என்றும் எதிர்கால டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனை நியமிக்கும் வரை அவர் கேப்டன் பதவியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பெஸ்ட் டீம் சி.எஸ்.கே கிடையாது.. பெஸ்ட் கேப்டன் தோனி கிடையாது.. அந்த டீமும், கேப்டனும் தான் பெஸ்ட் – மனோஜ் திவாரி தேர்வு
ஆஸ்திரேலிய தொடரின் போதே விராட் கோலி கேப்டன் பதவியை கேட்டதாக ஒரு பேச்சு அடிபட்ட வேளையில் மீண்டும் அதேபோன்ற கருத்து வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து பிசிசிஐ மற்றும் விராட் கோலி ஆகியோரது தரப்பில் இருந்து எவ்வித உறுதியான கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.