கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது இன்று மார்ச் 9-ஆம் தேதி துபாயில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஐ.சி.சி கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர்.
கிரிஸ் கெயிலை முந்த காத்திருக்கும் விராட் கோலி :
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் விராட் கோலி படைக்க இருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான போட்டியில் மட்டும் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 746 ரன்கள் அடித்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக மேலும் 46 ரன்கள் அடித்தால் சர்வதேச அளவில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் அதிக ரன்கள் அடித்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இவருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் 791 ரன்கள் அடித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். தற்போது 746 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இன்னும் 46 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரது இந்த சாதனையை கடப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்ததோடு சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க : அடுத்த வருஷம் ஐ.பி.எல் தொடரில் ஆடுவேன்.. அதிலும் குறிப்பாக அந்த அணிக்காக விளையாட ஆசை – முகமது அமீர்
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய வீரராக அதிக ரன்கள் அடித்துள்ள விராட் கோலி சர்வதேச அளவிலும் கெயிலின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்றுள்ள 4 ஆட்டங்களில் 217 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி இன்றைய போட்டியில் சதமடித்தால் கோல்டன் பேட் விருதினையும் வெல்ல வாய்ப்புள்ளது.



