தொடரும் கிங் கோலியின் வேட்டை – ஜாம்பவான் கிறிஸ் கெயிலை முந்தி விவ் ரிச்சர்ட்ஸ்க்கு நிகராக புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் பரிசளித்த வரலாற்று தோல்விக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. அதே புத்துணர்ச்சியுடன் அக்டோபர் 27ஆம் தேதியன்று தன்னுடைய 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 179/2 ரன்களை குவித்தது.

தொடக்க வீரர் ராகுல் ஆரம்பத்திலே 9 (12) ரன்களில் நடையை கட்டினாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்து 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 (39) ரன்கள் குவித்து அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமாருடன் கைகோர்த்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 3வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (44) ரன்கள் விளாசினார். மறுபுறம் அவரை விட அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

- Advertisement -

தொடரும் வேட்டை:
அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய நெதர்லாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆல் அவுட்டாவதை தவிர்த்தாலும் 20 ஓவர்களில் 123/9 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மேக்ஸ் ஓ’தாவுத் 16, டீ லீடி 16, கேப்டன் எட்வர்ட்ஸ் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20 (15) ரன்களை எடுத்தார். இந்தியாவின் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அக்ஸர் பட்டியல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியொர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இந்த எளிதான வெற்றியால் பங்கேற்ற 2 போட்டிகளிலும் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் அவரைவிட அற்புதமான க்ளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய விராட் கோலி 62* (44) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் மீண்டும் கருப்பு குதிரையாக செயல்பட்டார். கடந்த 15 வருடங்களாக 3 வகையான இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் மெகா வீழ்ச்சியை சந்தித்து சதமடிக்க முடியாமல் தவித்தார்.

- Advertisement -

அதற்கு பதிலடியாக சமீபத்திய ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து பார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் பாகிஸ்தானுக்கு எதிராக கதை முடிந்ததாக கருதப்பட்ட போட்டியில் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து பழைய பன்னீர்செல்வமாக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

அந்த வெற்றி வேட்டை நடையை தொடரும் அவர் இப்போட்டியில் குவித்த 62* ரன்களையும் சேர்த்து டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. மகிளா ஜெயவர்த்தனே : 1016
2. விராட் கோலி : 989*
3. கிறிஸ் கெயில் : 965
4. ரோஹித் சர்மா : 904*
5. திலகரத்னே தில்சான் : 897

அத்துடன் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என அனைத்து விதமான ஐசிசி உலக கோப்பையும் சேர்த்து குறைந்தபட்சம் 1000+ ரன்கள் குவித்த வீரர்களில் 60க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை கொண்ட 2வது வீரர் என்ற அற்புதமான சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். உலகிலேயே அவரை தவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.

Advertisement