வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்ததால் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டதும் ரஞ்சிக்கோப்பையில் அசத்தும் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படாததும் நிறைய விமர்சனங்களை எழுப்பியது. மேலும் பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்வதற்கு இளம் வீரர்களை தேர்வு செய்யாமல் விராட் கோலி போன்ற முதன்மை அணியை தேர்வு செய்தது ஏன் என்றும் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.
இப்படி பல விமர்சனங்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாமினிக்கா நகரில் இருக்கும் விண்ட்சோர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. பார்படாஸ் நகரில் முதற்கட்ட பயிற்சிகளை முடித்துக் கொண்டு தற்போது அந்த மைதானத்திற்கு இந்திய அணியினர் சென்றுள்ளனர்.
விராட் கோலியின் நெகிழ்ச்சி:
அந்த மைதானத்தை பார்த்ததும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடைசியாக அங்கு விளையாடிய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது இந்த டாமினிக்கா மைதானத்தில் கடைசியாக இந்தியா கடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த 2011 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 40, 112 ரன்களை எடுத்த உதவியுடன் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தோனி தலைமையிலான இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
அதை தொடர்ந்து பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டி டிராவில் முடிந்த நிலையில் முக்கியமான 3வது போட்டி இந்த டாமினிகா மைதானத்தின் முதல் வரலாற்று டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 204 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தோனி 74, அபினவ் முகுந்த் 62, லக்ஷ்மன் 56, ரெய்னா 50 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் 347 ரன்கள் எடுத்தது. அதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் சதமடித்து 116* ரன்களும் கிர்க் எட்வர்ட்ஸ் 110 ரன்களும் எடுத்து பெரிய சவாலை கொடுத்தனர்.
இறுதியில் 180 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முரளி விஜய் 45 ரன்கள் ராகுல் டிராவிட் 34* ரன்கள் எடுத்த போதிலும் நேரம் முடிவடைந்ததால் அப்போட்டி டிராவில் முடிந்தது. அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் அந்த சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்த விராட் கோலி அப்போட்டியில் 30 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சுற்றுப்பயணத்திற்கு பின் 12 வருட காலங்கள் உருண்டோடிய நிலையில் அப்போதிலிருந்த அணியில் சீனியர் வீரராக இருந்த ராகுல் டிராவிட் தற்போது தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார்.
மறுபுறம் 2011 சுற்றுப்பயணத்தில் விளையாடிய தோனி, ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் விராட் கோலி மட்டுமே இப்போதும் விளையாடும் ஒரே வீரராக களமிறங்க உள்ளார். அதை பற்றி நெகிழ்ச்சியுடன் விராட் கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது பின்வருமாறு. “2011இல் டாமினிக்காவில் நாங்கள் விளையாடிய கடைசி டெஸ்டில் 2 பேர் மட்டுமே பங்கேற்றோம். இந்த பயணம் எங்களை வெவ்வேறு திறன்களில் மீண்டும் இங்கு கொண்டு வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்கள்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இந்திய வீரர்களுக்கு – அறிமுக வாய்ப்பு
அந்த வகையில் டாமினிக்கா மைதானத்தில் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் 12 வருடங்கள் கழித்து இந்தியா 2வது முறையாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.