
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் திடீர் ஓய்வினை அறிவித்து ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
இப்படி டெஸ்ட் மற்றும் டி20 என இருவகையான போட்டிகளிலும் அவர் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார். அதுமட்டும் இன்றி 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றுவதே தனது இலக்கு என்று முடிவு செய்து அதை நோக்கி தற்போது பயணித்து வருகிறார்.
ஆனாலும் ஒருவகையிலான போட்டியில் மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியின் எதிர்காலத்தையும், வயதையும் கருத்தில் கொண்டு இந்திய அணி அவரை அடுத்த உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யுமா? என்ற கேள்வி அதிகரித்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து விராட் கோலி தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். இவ்வேளையில் அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் அவர் அதற்கு முன்னதாக உள்ளூர் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே பிசிசிஐ நட்சத்திர வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடரில் விளையாடும் படி கேட்டுக் கொண்ட நிலையில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும், விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாட முடிவு செய்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி இடம் பிடித்து விளையாட இருக்கிறார்.
இதையும் படிங்க : மதிக்காததால் தண்டனை பெற்ற இஷான்.. இப்போ மரியாதை கொடுத்ததால் கம்பேக் பண்ணிருக்காரு.. அஸ்வின்
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் உள்ளூர் போட்டியில் அவர் விளையாட இருப்பதால் ரசிகர்களும் இந்த தொடரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனாலும் விராட் கோலி இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்றும் அதன் பிறகு அவர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.