இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜூலை 20-ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. அதன்படி நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 குவித்திருந்த வேளையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்திற்கு வந்து தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர்.
அதன்படி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 87 ரன்களுடன் இருந்த விராட் கோலி மேலும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதேபோன்று ஜடேஜாவும் 36 ரன்களில் இருந்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய சில மணி நேரங்களிலேயே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29-வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
அதேபோன்று ஜடேஜாவும் தனது அரைசதத்தை அடித்து அசத்தினார். அடுத்தடுத்து விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் மற்றும் அரைசதம் அடிக்கவே இந்திய அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் விராட் கோலி 206 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
அதே போன்று ஜடேஜாவும் 61 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணியானது இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆறு விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 29-ஆவது சதத்தை பதிவு செய்த விராட் கோலி ரன் அவுட்டாகி வெளியேறிய விடயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனெனில் பொதுவாகவே மிகச் சிறப்பாக ரன்னிங் ஓடும் விராட் கோலி எப்போதாவதுதான் கவனச்சிதறல் ஏற்பட்டு இதுபோன்று ரன் அவுட்டாவதை நாம் பார்த்திருக்க முடியும். அந்த வகையில் 111 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் கோலி இப்போதுதான் மூன்றாவது முறையாக ரன் அவுட் ஆகியுள்ளார்.
இதையும் படிங்க : வங்கதேசத்திடம் கைமீறி போன வெற்றியை பறித்த இந்தியா – வளரும் ஆசிய கோப்பை ஃபைனலில் மோதப்போவது யாருடன் தெரியுமா?
ஏற்கனவே கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெயிடு போட்டியின் போதும், அதன்பிறகு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற அடிலெயிடு போட்டியிலும் விராட் கோலி ரன் அவுட் ஆகியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ரன் அவுட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.