வங்கதேசத்திடம் கைமீறி போன வெற்றியை பறித்த இந்தியா – வளரும் ஆசிய கோப்பை ஃபைனலில் மோதப்போவது யாருடன் தெரியுமா?

IND a VS BAN A
- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. அதில் 2022 அண்டர்-19 ஐசிசி உலக கோப்பையை வென்ற அனுபவம் மிகுந்த கேப்டன் யாஷ் துள் தலைமையில் லீக் சுற்றில் குரூப் பி பிரிவில் அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக களமிறங்கிய 3 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த வங்கதேசத்தை ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா எதிர்கொண்டது.

கொழும்புவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு கடந்த போட்டியில் சதமடித்த அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து 3 பவுண்டரியுடன் 21 (24) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த நிக்கின் ஜோஸ் 17 (29) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

ஃபைனலில் இந்தியா:
அதனால் மறுபுறம் நிதானமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 34 (63) ரன்களில் அவுட்டாக மிடில் ஆர்டரில் ரியான் பராக் 5, நிஷாந்த் சிந்து 12, துருவ் ஜூரேல் 1 என முக்கிய வீரர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 121/6 என தடுமாறிய இந்தியா ஏ அணிக்கு மறுபுறம் தொடர்ந்து 4வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற கேப்டன் யாஷ் துள் மிகவும் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து 6 பவுண்டரியுடன் 66 (85) ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றினார்.

இறுதியில் மாணவ் சுதர் 21 (24), ராஜ்வர்தன் ஹங்கர்ரேக்கர் 15 (12) என டெயில் எண்டர்கள் எடுத்த முக்கிய ரன்களையும் சேர்த்து 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா ஏ அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ரகிப்புல் ஹசன், மெஹதி ஹசன், டன்சிப் ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 212 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டன்சித் ஹசன் 8 பவுண்டரியுடன் 51 (56) ரன்கள் எடுத்ததால் இந்தியாவின் வெற்றி ஆரம்பத்திலேயே பறிபோனதாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அவரை சரியான நேரத்தில் அவுட் செய்த இந்தியா அடுத்த சில ஓவர்களில் சவால் கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் முகமத் நைய்மை 38 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினர். அதை வீணடிக்காமல் அடுத்ததாக வந்த ஜாகிர் ஹசன் 5, சௌமியா சர்கார் 5 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த இந்தியாவுக்கு மிடில் ஓவர்களில் கேப்டன் சைம் ஹசன் 22 ரன்களும் ஹசன் ஜாய் 20 ரன்களும் எடுத்து சவாலை கொடுத்து வெற்றிக்கு போராடினர்.

ஆனால் அவர்களையும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க விடாத இந்திய பவுலர்கள் அடுத்து வந்த வீரர்களையும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திருப்பி 34.2 ஓவரிலேயே வங்கதேசத்தை 160 ரன்களுக்கு சுருட்டி அபாரமாக பந்து வீசினர். அதன் காரணமாக 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய நிஷாந்த் சிந்து 5 விக்கெட்டுகளையும் மாணவ் சுதர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தினார்கள்.

இதையும் படிங்க:15 வருஷம்.. 110 டெஸ்ட் போட்டியில் விளையாடியும் விராட் கோலியின் இந்த குணம் மாறவில்லை – ராகுல் டிராவிட் வெளிப்படை

இந்த வெற்றிக்கு 66 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் யாஷ் துள் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதை விட இந்த போட்டிக்கு முன்பாக இதே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த பாகிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன் காரணமாக ஜூலை 23ஆம் தேதி இதே கொழுப்பு மைதானத்தில் 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் சந்திக்க உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisement