5 வருடம், 100 மேட்ச் ! எதுவுமே ஒர்க் ஆகாமல் பார்மின்றி தவிக்கும் அசுரன் முகம் விராட் கோலி – அதிர்ஷ்டம் இல்லையா

Virat Kohli Golden Duck
- Advertisement -

ரசிகர்களின் எகிற வைக்கும் எதிர்பார்ப்புடன் மும்பை நகரில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் பல விறுவிறுப்பான தருணங்களுடன் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரை வீசிய இலங்கையின் லக்னோ பவுலர் துஷ்மந்தா சமீரா 5-வது பந்தில் இளம் தொடக்க வீரர் அனுஜ் ராவத்தை 4 (5) ரன்களில் அவுட் செய்தார்.

- Advertisement -

கோல்டன் டக் கோலி:
அந்த நிலையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி அதிரடியாக ரன்களை விளாசுவார் என மைதானத்தில் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் சமீரா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் அதிரடியாக அடிக்க முயன்ற போதிலும் கேட்ச் கொடுத்து அவுட்டானது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக மாபெரும் சாதனை படைத்த அவர் 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்படி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகியுள்ளது அவரின் ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

ஆம் ஐபிஎல் கிரிக்கெட்டில் மகத்தான பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் இப்படி கோல்டன் டக் அவுட்டாவது இது 4-வது முறையாகும். கடந்த 2017-ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு நடைபெற்ற போட்டியில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சாதனையை  பெங்களூரு படைத்ததை எந்த ரசிகர்களாலும் மறக்க முடியாது. அந்த போட்டியில் கோல்டெர் நைல் வீசிய பந்தில் கோல்டன் டக் அவுட்டான அவர் அதன் பின் தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் அதேபோல் அவுட்டாகி உள்ளார்.

- Advertisement -

100 மேட்ச்:
சமீப காலங்களாகவே பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறி வரும் அவர் இந்தப் போட்டியில் பழைய ஃபார்முக்கு திரும்புவார், அந்தப் போட்டியில் பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து அனைத்து ரசிகர்களும் தொடர்ந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர். ஏனெனில் கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்த அவர் அதன்பின் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என இந்தியாவுக்காக சர்வதேச அளவிலும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காகவும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.

அதிலும் அந்த அடுத்த சதத்தை தேடிய அவரது பயணம் தற்போது 100 போட்டிகளை கடந்துள்ளது. ஆம் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக 2019இல் அடித்த அந்த கடைசி சதத்திற்கு பின்பு 17 டெஸ்ட், 21 ஒருநாள், 25 டி20, 37 ஐபிஎல் போட்டிகள் என மொத்தம் 100 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தொடர்ந்து 2 வருடங்களாக அவுட்டாகி வருவது உண்மையாகவே பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுகிறது.

- Advertisement -

அசுரன் முகம்:
இத்தனைக்கும் இடையிடையில் 30, 40, அரை சதங்கள் போன்ற நல்ல ரன்களை எடுத்துள்ள அவர் படுமோசமான பார்ம் அவுட் என்றும் கூற முடியாது. இருப்பினும் ஏற்கனவே அதிரடி சரவெடியாக அசால்டாக ரன்களை குவித்து ரன் மெஷினாக பல சாதனைகளைப் படைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என தன்னைத்தானே நிரூபித்துள்ள அவரின் தரத்திற்கு இது நிச்சயம் பார்ம் அவுட் என்றே கூறலாம்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை 41*, 12, 5, 48, 1, 12, 0 என ஓரளவு சுமாரான ரன்களை மட்டுமே எடுத்துள்ள அவர் இந்த 7 போட்டிகளில் 2 முறை ரன் அவுட்டாகி இன்று 5 வருடங்கள் கழித்து கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். அதிலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான பின் அவரின் முகத்தை பார்க்கும் பல ரசிகர்களின் நெஞ்சங்கள் நிச்சயமாக உடையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அசுரன் படத்தில் இறுதியாக வலியுடன் தனுஷ் கொடுக்கும் அந்தப் புன்னகையை போல அவரின் முகம் காணப்பட்டது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : பெஸ்ட் பவுலிங் கூட்டணி இவங்ககிட்ட தான் இருக்கு, அதுதான் வெற்றி ரகசியம் – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

பொதுவாக எவ்வளவுதான் உழைத்தாலும் ஒரு சில நேரங்களில் அதிர்ஷ்டம் இல்லை எனில் எதுவும் சாதிக்க முடியாது. அந்த வகையில் எவ்வளவோ முயற்சித்தும் பயிற்சி செய்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்பது போல் ரியாக்சன் கொடுத்த கோலி சோகத்துடன் பெவிலியன் திரும்பினார். இதையே முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபரும் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement