ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே ஐந்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோ நகரில் 54வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு சுனில் நரேனுடன் சேர்ந்து 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பில் சால்ட் 32 (14) ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது வந்த அங்கிரிஸ் ரகுவன்சியுடன் சேர்ந்து எதிர்ப்புறம் தொடர்ந்து லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கிய சுனில் நரேன் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு கொல்கத்தாவை வலுப்படுத்தினார். அதே வேகத்தில் 27 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் 6 பவுண்டரி 7 சிக்சருடன் 81 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா வெற்றி:
அடுத்ததாக வந்த ஆண்ட்ரே ரசல் 12 (8) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரகுவன்சியும் 32 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரிங்கு சிங் 16, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 23, ரமந்திப் சிங் சரவெடியாக 25* (6) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 235/6 ரன்கள் குவித்தது. மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 236 ரன்களை துரத்திய லக்னோ அணிக்கு அர்சின் குல்கர்னி 9 ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 25 (21) ரன்களில் நடையை கட்டினார். அடுத்ததாக வந்த தீபக் ஹூடா 5 ரன்னில் வருண் சக்கரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார். போதாகுறைக்கு மறுபுறம் அடித்து நொறுக்க முயற்சித்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸை 36 (21) ரன்களில் ரசல் அவுட்டாக்கினார்.
அத்தோடு நிற்காத ரசல் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரானை 10 ரன்னில் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அதனால் 101/5 என தடுமாறிய லக்னோவுக்கு அடுத்ததாக வந்த ஆயுஸ் படோனி 15, ஆஸ்டன் டர்னர் 16, க்ருனால் பாண்டியா 5 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்க தவறினார்கள். அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 16.1 ஓவரில் லக்னோ 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.
இதனால் ஐபிஎல் தொடரில் லக்னோவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் கொல்கத்தா சாதனை படைத்தது. இதற்கு முன் 2023 சீசனில் லக்னோவை 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்ததே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு பந்து வீச்சிலும் மிரட்டிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதையும் படிங்க: 6 போர்ஸ் 7 சிக்ஸ்.. 6 முறை 200.. வெளுத்த சுனில் நரேன்.. லக்னோவை நொறுக்கிய கொல்கத்தா.. 2 மிரட்டலான சாதனை
அதனால் 11 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா +1.453 என்ற கூடுதல் ரன் ரேட் காரணமாக ராஜஸ்தானை முந்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை 99% செய்துள்ளது. குறிப்பாக மற்ற அணிகள் +1.000 என்ற ரன்ரேட்டுக்கும் குறைவான ரன்ரேட் வைத்திருப்பதால் கொல்கத்தா பிளே ஆஃப் செல்வது உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம்.