பாவம்’யா மனுஷன்.. ஆர்சிபி தோல்விக்கு விராட் கோலி தான் காரணமா? சச்சினை முந்தி 2 பரிதாப சாதனை

Virat Kohli 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 19வது லீக் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் 4 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 183/3 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி சதமடித்து 113* (72) ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 184 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 69 (42) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜோஸ் பட்லர் தன்னுடைய 100வது போட்டியில் சதமடித்து 100* (58) ரன்கள் விளாசி சாதனையுடன் 19.1 ஓவரில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

பரிதாபமான கிங்:
அதனால் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 2 விக்கெட்டுகள் எடுத்தும் பெங்களூரு 4வது தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் வழக்கம் போல நங்கூரமாக விளையாடிய விராட் கோலி நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார். ஆனாலும் எதிர்ப்புறம் 133.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 44 (33) ரன்களில் அவுட்டானார். அதை விட மேக்ஸ்வெல் 1 (3), சௌரவ் சௌகான் 9 (6), க்ரீன் 5* (6) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ரன்கள் எடுக்கவில்லை.

அதன் காரணமாக நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட விராட் கோலி 67 பந்துகளில் சதத்தை தொட்டு 156.94 ஸ்ட்ரைக் ரேட்டில் 12 பவுண்டரி 4 சிக்சருடன் 113* ரன்கள் குவித்து நன்றாகவே ஃபினிஷிங் செய்தார். இருப்பினும் 67 பந்துகளில் சதத்தை தொட்ட அவர் சச்சின் டெண்டுல்கர், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் (தலா 66 பந்துகள்) ஆகியோரை முந்தி ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதத்தை அடித்த வீரர் என்ற மனிஷ் பாண்டேவின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

- Advertisement -

அதனால் விராட் கோலி தான் தோல்விக்கு காரணம் என்று வழக்கம் போல ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையாகவே எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி கைகொடுக்காத நிலையில் விராட் கோலியும் அவுட்டாகியிருந்தால் பெங்களூரு 170 ரன்கள் தாண்டியிருக்காது என்பதே நிதர்சனம். அத்துடன் விராட் கோலி போராடி அடித்த ரன்களையும் வழக்கம் போல ஆர்சிபி பவுலர்கள் பந்து வீச்சில் வாரி வழங்கி வெற்றியை எளிதாக தாரை வார்த்தனர்.

இதையும் படிங்க: 100வது போட்டியில் சதமடிக்க அது தான் ஹெல்ப் பண்ணுச்சு.. ஆர்சிபி’யை தோற்கடித்த பட்லர் பேட்டி

அதனால் ஐபிஎல் வரலாற்றில் தோல்வியை சந்தித்த போட்டிகளில் அதிக சதங்கள் (3) அடித்த வீரர் என்ற பரிதாப சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் சஞ்சு சாம்சன் மற்றும் ஹாசிம் அம்லா தலா 2 சதங்கள் அடித்த போட்டிகளில் அவர்களுடைய அணிகள் தோல்வியை சந்தித்தன.

Advertisement