ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் சென்னையை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 62, ஜேக்கப் பேத்தல் 55, ரொமாரியா செபார்டு 53* ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக விளையாடிய சிஎஸ்கே முடிந்தளவுக்கு 20 ஓவரில் 211/5 ரன்களை மட்டுமே எடுத்து தங்களுடைய 9வது தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஸ் மாத்ரே 94, ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் எடுத்தார்கள். இருப்பினும் தோனி, துபே உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஃபினிஷிங் செய்ய தவறினார்கள்.
கிங் கோலி சாதனைகள்:
அதன் காரணமாக 8வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி மொத்தம் 1146 ரன்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சரித்திர சாதனையை விராட் கோலி படத்துள்ளார்.
இதற்கு முன் பஞ்சாப்புக்கு எதிராக டேவிட் வார்னர் 1134 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மேலும் இப்போட்டியையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 10 முறை விராட் கோலி 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக அதிக முறை 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
3 வரலாற்று சாதனை:
இதற்கு முன் டேவிட் வார்னர், ஷிகர் தவான், ரோஹித் சர்மா ஆகியோர் சென்னைக்கு எதிராக தலா 9 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அப்படி சென்னையை வெளுப்பதில் 2 ஸ்பெஷல் சாதனைகளை படைத்த விராட் கோலி இந்த வருடம் மொத்தம் 505* ரன்கள் அடித்துள்ளார். இதையும் சேர்த்து தம்முடைய கேரியரில் விராட் கோலி 8 ஐபிஎல் தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: 4, 4, 4, 6, 4, 4.. தரமான புவியை நொறுக்கிய ஆயுஷ்.. ரெய்னாவின் 18 வருட சாதனையை உடைத்து வருங்கால சிஎஸ்கே நாயகனாக சாதனை
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஒரு தொடரில் 500+ ரன்கள் அடித்த வீரர் என்ற சரித்திரத்தையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் டேவிட் வார்னர் 7 முறை 500+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. மொத்தத்தில் தொடர்ச்சியாக அசத்தி வரும் அவர் சாய் சுதர்சனை முந்தி மீண்டும் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் ஆக்கியுள்ளார்.



