- Advertisement -
ஐ.பி.எல்

3 கோல்டன் டக், முரட்டு பார்ம் அவுட், விமர்சனங்கள் ! அனைத்துக்கும் முதல்முறையாக பதிலளித்த விராட் கோலி – கூறியது இதோ

எதிர்பாரா திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் ஃபார்ம் உண்மையாகவே ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை ஒரே அணிக்காக விளையாடும் வீரர் என்ற மகத்தான சாதனைப் படைத்த விராட் கோலி 2013 – 2021 வரை பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு மலைபோல ரன்களைக் குவித்து வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். இருப்பினும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பதால் விமர்சனத்திற்கு உள்ளான அவர் கடந்த 2021இல் இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூரு கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

அத்துடன் 70 சதங்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அவர் கடைசியாக 2019இல் சதமடித்திருந்தார். அதன்பின் சதமடிக்க முடியாமல் திணறிய அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் இந்தியாவின் மொத்த கேப்டன்ஷிப் பொறுப்பையும் துறந்து சுதந்திரப் பறவையாக விளையாட தொடங்கியதால் பார்முக்கு திரும்புவார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள அவர் முன்பை விட மோசமாய் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான பார்மில் மூழ்கியுள்ளார்.

- Advertisement -

விமர்சனமும், பதிலும்:
அதிலும் 2008 – 2021 வரை 3 முறை ம்ட்டுமே கோல்டன் டக் அவுட்டான 2022இல் மட்டும் 3 கோல்டன் டக் அவுட்டாகி இதுவரை 12 போட்டிகளில் 216 ரன்களை 19.64 என்ற மோசமான சராசரியில் எடுத்து வருகிறார். மேலும் கடந்த 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என மொத்தம் 105* போட்டிகளாக கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் முரட்டுத்தனமான பார்ம் அவுட்டில் இருக்கிறேன் என்று நிரூபித்துக்கொண்டே வருகிறார். அதிலும் இந்த ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டானபோது வலி நிறைந்த முகத்துடன் சிரித்துக்கொண்டே பெவிலியன் திரும்பிய அவரை பார்த்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மனமுடைந்து போனார்கள்.

ஒரு ரன் மெஷினாக ஓடிஓடி அவரின் உடம்பும் மனதும் களைப்படைந்து விட்டதால் 2 – 3 மாதங்கள் தற்காலிக ஓய்வு எடுத்து இந்த மோசமான பார்மிலிருந்து புத்துணர்ச்சியுடன் பழைய பார்முக்கு திரும்புமாறு ரவிசாஸ்திரி உட்பட பல முன்னாள் வீரர்களும் அவருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படி அடுத்தடுத்த கோல்டன் டக் , தொடர்ச்சியான விமர்சனங்கள் என மோசமான தருணத்தில் தவிக்கும் விராட் கோலி முதல் முறையாக அவை அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பெங்களூர் அணி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் பந்திலேயே டக் அவுட்டானானது..கடவுளே அதுபோன்று எனது வாழ்நாளில் நடைபெற்றதே கிடையாது. அதிலும் 2-வது முறையாக டக் அவுட்டானபோது ஒரு உதவி அற்றவர் எப்படி உணர்வாரோ அதை நானும் உணர்ந்தேன். அதன் காரணமாகவே அன்றைய நாளில் சிரித்தேன். ஏனெனில் தற்போது அனைத்தையுமே பார்த்து விட்டதாக நான் உணர்கிறேன். இந்த விளையாட்டில் பார்க்க வேண்டிய அனைத்தையும் இவ்வளவு காலத்திற்குப் பின் பார்த்துவிட்டேன்” என்று கூறினார்.

அதாவது பல ரன்கள், பல சதங்கள், பல சாதனைகள் என உச்சகட்டத்தை பார்த்த தாம் முதல் முறையாக அடுத்தடுத்த கோல்டன் டக் அவுட்டையும் பார்த்தது வேதனையாக இருந்தது என்று விராட் கோலி தெரிவித்தார். மேலும் எவ்வளவு கடினமாக உழைத்தும் பயிற்சி எடுத்தும் அதிர்ஷ்டம் கை கொடுக்காததால் உதவியற்றவராக உணர்ந்து இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதாலேயே அன்றைய நாளில் வலியுடன் சிரித்ததாகவும் கூறினார்.

- Advertisement -

ஓய்வுக்கு பதில்:
அத்துடன் ஒருசில மாதங்கள் தற்காலிகமாக ஓய்வு எடுங்கள் போன்ற விமர்சனங்களுக்கு விராட் கோலி வெளிப்படையாக பதிலளித்தது பின்வருமாறு. “அவர்கள் (விமர்சகர்கள்) என்னுடைய இடத்தில் நிற்க முடியாது. அவர்களால் நான் என்ன உணர்கிறேன் என்று உணர முடியாது. அவர்கள் என்னுடைய வாழ்க்கையை வாழ முடியாது.

அந்த மோசமான தருணங்களில் எனக்காக அவர்கள் இருக்க முடியாது. எனவே அது போன்ற வெளிப்புற சத்தங்களை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும்? தொலைக்காட்சியை நிறுத்துவது அல்லது அவர்கள் சொல்வதை கேட்காமல் இருப்பது அல்லது அவர்கள் கூறுவதை கேட்பது. நான் இந்த இரண்டுமே செய்து வருகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஆமை மாதிரி மெதுவா பேட்டிங் செய்றீங்க ! கலாய்த்த ரசிகர்களுக்கு பல்ப் கொடுத்த நட்சத்திர வீரர்

தன்னைப்பற்றி பேசுபவர்களால் தன்னுடைய இடத்தில் இருக்க முடியாது என்பதால் அவர்கள் தொடர்ந்து பேசினாலும் தனது வேலையை தொடர்ந்து செய்ய உள்ளதாக விராட் கோலி கூறியுள்ளார். மேலும் விமர்சனங்களுக்காக பயந்து ஓடாமல் அதைத் தொடர்ந்து கேட்க உள்ளதாக கூறும் அவர் தன்மீதும் தனது திறமை மீதும் நம்பிக்கையும் இருப்பதால் விமர்சனங்கள் கூறுவது போல ஓய்வெடுக்காமல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடி பார்முக்கு திரும்ப முயற்சிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -
Published by