ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற 20வது போட்டியில் மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் மும்பையை அதனுடைய சொந்த ஊரில் இருக்கும் வான்கடே மைதானத்தில் 10 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்தது. அந்த அணிக்கு பேட்டிங்கில் விராட் கோலி 67, கேப்டன் ரஜத் படிதார் 64 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 4 விக்கட்டுகளை வீழ்த்தி வெற்றியில் பங்காற்றினர்.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 15 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்தது. அதே போல தற்போது மும்பையையும் அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது ஆர்சிபி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து முடித்ததும் விராட் கோலியிடம் பேட்டி எடுக்கப்பட்டது.
விராட் கோலியின் சவால்:
அப்போது 2016 முதல் வான்கடே மைதானத்தில் பெங்களூரு தொடர்ந்து தோல்வியை சந்திப்பது பற்றி ரவி சாஸ்திரி கேட்டது பின்வருமாறு. “2016 முதல் வான்கடே மைதானத்தில் நீங்கள் 6 – 0 என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்துள்ளீர்களே” என்று கேட்டார். அதற்கு சிஎஸ்கே அணியை 15 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்தோம்.
அதே போல இன்றைய நாளில் வான்கடே மைதானத்தில் மும்பையை மண்ணை கவ்வ வைப்போம் என்று விராட் கோலி நம்பிக்கையுடன் சவால் விட்டார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் நமக்குத் தெரிவது போல நேர்மறையாக இல்லை. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து ஸ்லோவான பந்துகளை பௌலிங் செய்தார். அதனால் பந்து பேட்டுக்கு எளிதாக வரவில்லை”
சாதித்து காட்டிய பெங்களூரு:
“இருப்பினும் நாங்கள் நல்ல ஸ்கோர் எடுத்துள்ளோம். அது வெற்றிக்கு எவ்வளவு போதுமானதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. சேப்பாக்கத்தில் நாங்கள் 17 வருடங்களாக வெற்றியைப் பெறாமல் இருந்தோம். அதை உடைத்தது போல இங்கேயும் நாங்கள் வெற்றியைப் பெற்று மோசமான சாதனையை உடைப்போம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பயிற்சியில் அது சரியாக வராததால் அழுதேன்.. பின்னணியை பகிர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர்
கடைசியில் மும்பையை அதன் சொந்த மண்ணில் 10 வருடங்கள் கழித்து தோற்கடித்த பெங்களூரு விராட் கோலி விட்ட சவாலில் வென்றுக் காட்டியது. அத்துடன் ஒரே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த 2வது அணி என்ற சாதனையையும் பெங்களூரு படைத்துள்ளது. இதற்கு முன் 2012இல் பஞ்சாப் அணி அந்த சாதனையை முதலாவதாக படைத்தது குறிப்பிடப்பட்டது.



