ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவர் இம்முறை 26.75 கோடிக்கு பஞ்சாப் கேப்டனாக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முதலில் 2 போட்டிகளில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த அவர் பஞ்சாப் வெற்றிகளில் பங்காற்றி நன்றாக தலைமைத் தாங்கி வருகிறார்.
மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்த அவர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதே ஃபார்மில் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அசத்தி வருவது பஞ்சாப் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கடைசியாக எப்போது அழுதீர்கள் என்று அவரிடம் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் சமூக வலைதள ஊடகத் தொகுப்பாளர் கேட்டார்.
துபாயில் அழுகை:
அதற்கு 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது துபாயில் பயிற்சி எடுக்கும் போது எதுவுமே சரியாக வராததால் கோபமடைந்து அழுததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடைசியாக நான் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் முதல் நாள் பயிற்சி செய்யும் போது அழுதேன். அன்றைய நாளில் கிட்டத்தட்ட நிறைய அழுதேன்”
“ஏனெனில் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்த போது எனக்கு எதுவுமே சரியாக செல்லவில்லை. அதனால் என் மீதே கோபமடைந்த நான் அழுதேன். சொல்லப்போனால் நான் எளிதாக அழக்கூடியவன் கிடையாது. அதையும் தாண்டி அழுதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அசத்திய வேகத்தில் சாம்பியன்ஸ் டிராபியிலும் அசத்துவேன் என்று நினைத்தேன்”
பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்:
“ஆனால் துபாயில் பிட்ச் வித்தியாசமாக இருந்ததால் முதல் நாளிலேயே அதற்கு என்னை நான் உட்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. அதனால் பயிற்சி முடிந்த பின் நான் எக்ஸ்ட்ராவாக மீண்டும் பயிற்சி செய்ய விரும்பினேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்காததால் மிகவும் கோபமடைத்தேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: திரில் உங்களை கொல்லும்.. 286 அடிச்சு போலீஸ்கிட்ட மாட்டுன ஹைதராபாத் தடுமாற இதான் காரணம்.. கவாஸ்கர் பேட்டி
இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி தங்களது அடுத்த போட்டியில் சென்னையை சந்திக்கிறது. இந்த வருடம் ஏற்கனவே தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் சென்னையை அந்தப் போட்டியில் தோற்கடிக்க பஞ்சாப் தயாராக உள்ளது. அந்தப் போட்டி சண்டிகரில் இருக்கும் முள்ளான்பூர் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



