ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணி தங்களது முதல் போட்டியிலேயே ராஜஸ்தானை அடித்து நொறுக்கி 286 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதனால் தொடர்ந்து அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கடுத்த 4 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாகப் பிடித்துள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பேட்டிங் துறையில் சூழ்நிலைகளை மதிக்காமல் எப்போதும் அதிரடியாகவே விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையே அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதே போல ஹைதராபாத் அணியின் பவுலிங் துறையும் நன்றாக செயல்படவில்லை. இந்நிலையில் ஹைதராபாத் அணி பேட்டிங்கில் 300 ரன்கள் தொட வேண்டும் என்ற நோக்கத்துடன் வேகமாக விளையாடுவதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வேகத்தால் சாயும் ஹைதராபாத்:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் விரிவாக பேசியது பின்வருமாறு. “வேகம் பற்றி ஒரு விஷயம் இருக்கிறது அல்லவா? அதாவது வேகம் த்ரில்லை கொடுக்கும். ஆனால் அதே வேகம் உங்களைக் கொல்லும். கடந்த வருடம் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஆகிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் பவர் பிளேவையும் தாண்டி வேகமாக விளையாடும் புதிய டெம்ப்ளேட்டை உருவாக்கினார்கள்”
“அவர்கள் அசுர வேகத்தில் பேட்டிங் செய்து எதிரணியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். அதன் விளைவாக ஐபிஎல் தொடரில் 300 ரன்களை வாய்ப்பை அவர்கள் அடிக்கடி நெருங்கினார்கள். ஆனால் அவர்களுடைய பேட்டிங் இளைஞர்கள் ஆடம்பரமான காரில் சாலையில் உள்ள சிவப்பு விளக்கு வழியாக வேகமாக நிற்காமல் சென்று பிடிபடாதது போல் இருந்தது. இந்த வருடத்தின் முதல் போட்டியிலும் ஹைதராபாத் சிவப்பு விளக்கை மதித்து நிற்காமல் பிடிப்படாமல் சென்றனர்”
