ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற 42வது போட்டியில் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு விராட் கோலி 70, படிக்கல் 50 ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவரில் முடிந்தளவு போராடியும் 194-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 49, துருவ் ஜுரேல் 47 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூருவுக்கு அதிகபட்சமாக ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் இந்த வருடம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் வெற்றியை பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
வெற்றிக்கான வழி:
ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் 6வது வெற்றியைப் பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் வெற்றியைப் பெறுவதற்கான வழியைக் கண்டறிந்துள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதற்கு டாஸ் அதிர்ஷ்டம் மட்டும் கிடைப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே இனிமேல் அம்மைதானத்தில் வெற்றியை விடமாட்டோம் என்று தெரிவிக்கும் அவர் அது பற்றி பேசியது பின்வருமாறு. “வெற்றியால் மகிழ்ச்சி. பேட்டிங் துறையில் நாங்கள் விவாதித்த சில விஷயங்களை எங்கள் மீது செயல்படுத்தி போதுமான ரன்களை குவித்தோம். இரண்டாவது பகுதியில் பனி உதவி செய்தது. ராஜஸ்தான் அணியும் நன்றாக விளையாடியதற்கு பாராட்டுக்கள். ஆனால் அவர்களை மடக்கி 2 புள்ளிகளைப் பெற்றது மிகவும் முக்கியமானது”
கண்டு பிடிச்சுட்டோம்:
“டாஸ் வெல்வதே இந்த மைதானத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பாக இருக்கும் முதல் சவாலாகும். அதைப் பெற்று விட்டால் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் சாதகம் இருக்கிறது. இங்கே முதல் சில போட்டிகளில் நாங்கள் பெரிய ஸ்கோர் அடிக்க கடினமாக போராடினோம். இங்கே இன்று வெற்றி பெறுவதற்கான டெம்ப்ளேட் என்னவெனில் ஒருவர் முழுமையாக விளையாட வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் அட்டாக் செய்து விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: இந்தமுறை எல்லா ஏரியாவுகம் கவரா இருக்குது.. அதுதான் எங்களோட ஸ்ட்ரென்த் – ஆட்டநாயகன் ஹேசல்வுட் பேட்டி
“அந்த வழியில் விளையாடியது எங்களுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது. முதல் 3 – 4 ஓவர்கள் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. தற்போது இங்கே வெற்றிகரமாக பேட்டிங் செய்வதற்கான வழியை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எனவே அடுத்த சில போட்டிகளில் நாங்கள் எக்ஸ்ட்ரா 15 – 20 ரன்களை அடிப்பதற்கான நல்ல இடத்தில் இருப்போம். சின்னசாமி மைதானம் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு மிகவும் சிறந்த இடம். இங்கே ரசிகர்கள் மோசமான மற்றும் நல்ல காலங்களில் எப்போதும் உடன் இருப்பார்கள். இந்த ஸ்பெஷல் மைதானத்தில் நிறைய நல்ல நினைவுகளைக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.



