ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சொந்த மண்ணில் இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதோடு நடப்பு தொடரில் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர்கள் ஆறாவது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளனர்.
இம்முறை எங்களது அணியின் பலம் இதுதான் : ஜாஷ் ஹேசல்வுட்
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவிக்க பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹேசல்வுட் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் செயல்பட்ட விதம் குறித்து பேசிய ஆட்டநாயகன் ஹேசல்வுட் கூறுகையில் : முதலில் நான் என்னுடைய பலம் என்ன என்பதை அறிந்து இந்த போட்டியில் பந்து வீசினேன். கடினமான லென்த்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன்களால் ரன்களை குவிப்பது கடினம் என்று நினைத்தேன். அதேபோன்று அவ்வப்போது யார்க்கர், ஸ்லோ பால், பவுன்சர் என வேரியேஷன்களை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்.
அந்த வகையிலே இந்த போட்டியில் நான் எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினேன். எங்களுடைய அணியின் மிகப்பெரிய பலமே ஒரு குழுவாக இருந்து அனைத்து விடயங்களையும் பகிர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார்போன்று செயல்படுவது தான் என்று நினைக்கிறேன். இந்தமுறை ஆர்.சி.பி அணியின் பௌலிங் அட்டாக் மிகச் சிறப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க : சின்ன தப்பு பண்ணாலும் அதுக்கான தண்டனை கிடைச்சே ஆகும்.. தோல்விக்கு பிறகு – ரியான் பராக் வருத்தம்
அனைத்து பகுதிகளையும் நாங்கள் கவர் செய்துள்ளதாக நினைக்கிறோம். ஒவ்வொரு போட்டியின் போதும் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து சரியான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் எங்களால் மிகச் சிறப்பாக இந்த தொடரில் விளையாட முடிகிறது என ஜாஷ் ஹேசல்வுட் கூறியது குறிப்பிடத்தக்கது.



