இலங்கையில் முக்கிய பொருளை மறந்து விட்டு அலைந்த ரோஹித் சர்மா.. விராட் கோலியின் 2017 கருத்தை நிஜமாக்கிய பரிதாபம்

Rohit Virat
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து தாயகம் திரும்பியுள்ளது. கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த தொடரில் பாகிஸ்தானை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதி போட்டியில் இலங்கையை அதன் சொந்த ஊரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் அனலாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத இலங்கை 50 ரன்களுக்கு சுருண்டு மோசமான சாதனை படைத்தது. குறிப்பாக முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்து மொத்தமாக 6 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வகையில் 8வது முறையாக ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்குவதற்கு தாயகம் திரும்பியது.

- Advertisement -

ரோஹித்தின் மறதி:
அப்படி இலங்கையிலிருந்து நாடு திரும்புவதற்காக ஹோட்டலில் இருந்து கிளம்பிய இந்திய அணியினர் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டனர். ஆனால் அப்போது கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தம்முடைய பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையிலேயே மறந்து வைத்துவிட்டு அதை மீண்டும் சென்று எடுப்பதற்காக பேருந்தின் நுழைவு வாயிலிலேயே பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

இருப்பினும் மீண்டும் அவர் சென்றால் கூட்டம் நெரிசல் மற்றும் நேரம் அதிகமாகும் என்பதால் இந்திய அணியை சேர்ந்த துணைப் பயிற்சியாளர் ஒருவர் சென்று ஹோட்டல் அறைக்கு சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்து கொடுத்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில் ரோகித் சர்மாவின் இந்த மறதியை பற்றிய பின்னணியை கடந்த 2017ஆம் ஆண்டு விராட் கோலி பேசிய பழைய வீடியோவும் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அது பற்றி ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் 2017ஆம் ஆண்டு விராட் கோலி பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா எத்தனை விஷயங்களை மறந்து விடுகிறாரோ அந்தளவுக்கு மறக்கும் ஒரு நபரை நான் பார்த்ததில்லை. குறிப்பாக ஐபேட், பணப்பை, தொலைபேசி அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சிறு சிறிய பொருட்களை கூட அவர் மறந்து விடுவார். குறிப்பாக 2 – 3 முறை பாஸ்போர்ட்டை மறந்து விட்டார். அதை மீண்டும் அணி நிர்வாகத்தினர் எடுத்து கொடுத்த பின்பு தான் பேருந்து பயணிக்கும்” என்று கூறியிருந்தார்.

அவர் சொன்னது போலவே கடந்த பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டாஸ் வென்று என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை மறந்து ரோகித் சர்மா சுமார் 2 – 3 நிமிடங்கள் கழித்து தட்டு தடுமாறி சொன்னதை மறக்க முடியாது. அந்த வரிசையில் தற்போது மீண்டும் பாஸ்போர்ட்டை மறந்த அவர் விராட் கோலியின் கருத்தை உண்மையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement