நான் விராட் கோலியாக இருந்தால் ரிட்டையர் ஆகிடுவேன் – அப்ரிடியை தொடர்ந்து மற்றொரு பாக் வீரர் கருத்து

- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான இந்திய அணியிலும் 24000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி 71 சதங்களை அடித்து ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். சர்வதேச அரங்கில் இந்த நவீன கிரிக்கெட்டில் நிறைய பேட்ஸ்மேன்கள் 10 – 20 சதங்களை அடிப்பதற்கே தடுமாறும் நிலையில் 31 வயதிலேயே 70 சதங்களை விளாசிய அவர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை எளிதாக முறியடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சிறந்த பேட்ஸ்மேனாகவும் 3 வகையான இந்திய அணிக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை அவருடைய பிரம்மாண்ட கேரியரில் 2019க்கு பின் சதமடிக்க விடாமல் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

Virat Kohli

- Advertisement -

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சுதந்திரப் பறவையாக விளையாட தொடங்கிய அவர் அந்த சோதனை காலத்திலும் 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்து முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றி வந்தார். ஆனாலும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அது வரை பெற்றுக்கொடுத்த வெற்றிகளை மறந்த நிறைய முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் அவரது அருமையை உணர்ந்து நிறைய வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கொடுத்த ஆதரவுக்கு மத்தியில் சமீபத்திய 2022 ஆசிய கோப்பையில் ஒரு வழியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122* (61) ரன்கள் விளாசிய அவர் அனைவரும் கேட்ட சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களை தூளாக்கினார்.

100 சதங்கள்:
சரியாக 1020 நாட்கள் கழித்து சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் 3 வருடங்களாக அடம் பிடித்த 71ஆவது சதத்தையும் விளாசி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உலக சாதனையை சமன் செய்துள்ள அவர் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் மீண்டும் எழுந்துள்ளது. மேலும் தற்போது பார்முக்கு திரும்பியுள்ள அவர் அடுத்த 5 வருடங்களுக்கு சிறப்பாக செயல்படுவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Afridi

அந்த நிலையில் தற்போது பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி மீண்டும் ஒருமுறை அனைவரும் அணியிலிருந்து நீக்க சொல்லும் அளவுக்கு மோசமான தருணத்தை சந்திப்பதற்கு முன்பாக உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெறுவது பற்றி சிந்திக்குமாறு முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். அதற்கு நிறைய இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் “உங்களை போல் அடிக்கடி ஓய்வு பெறாமல் ஒரு முறை மட்டுமே விராட் கோலி ஓய்வு பெறுவார் என்பதால் அவரை நிம்மதியாக விடுங்கள்” என்ற வகையில் முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அக்தர் கோரிக்கை:
இந்நிலையில் தாம் விராட் கோலியாக இருந்தால் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஏற்கனவே பணிச்சுமையால் பாதித்து 3 வருடங்கள் சதமடிக்க முடியாமல் பார்மை மீட்டெடுக்க போராடிய விராட் கோலி தற்போது 33 வயதாகி விட்டதால் தனது கேரியரில் கடைசி வரை வெற்றிகரமாக விளையாடுவதற்காக பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Kohli and Akhtar

“டி20 உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி ஓய்வு பெறலாம். தனது கேரியரை இதர கிரிக்கெட்டை மையப்படுத்தி (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) விரிவுபடுத்துவதற்காக அவர் இதை செய்யலாம். ஒருவேளை நான் அவரிடத்தில் இடத்தில் இருந்தால் வருங்காலத்தை கருத்தில்கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் இந்த முடிவை எடுப்பேன்” என்று கூறினார்.

முன்னதாக சச்சினின் 100 சதங்கள் உடைப்பதற்கு டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே சாதிக்க முடியும் என்று கடந்த வாரமே சோயப் அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை 104 போட்டிகளில் 3584 ரன்களை உலகிலேயே அதிகபட்சமாக 51.94 என்ற சராசரியில் எடுத்துள்ள விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement