
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2007 முதல் நடைபெற்று வருகிறது. அதில் 2007 கோப்பையை வென்ற இந்தியா கடந்த 17 வருடங்களில் சில அற்புதமான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த வரிசையில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இந்திய கிரிக்கெட் அணி பதிவு செய்த வெற்றியை மறக்க முடியாது.
ஆம் 2022 அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஃஇப்திகார் அகமது 51, ஷான் மசூட் 52* ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியாவுக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
கிங் கோலியின் விஸ்வரூபம்:
ஆனால் அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 4, கேப்டன் ரோஹித் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 15, அக்சர் பட்டேல் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 31/4 என ஆரம்பத்திலேயே இந்தியா சரிந்ததால் 2021 டி20 உலகக் கோப்பையில் துபாயில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது போல் மீண்டும் அவமானத்தை சந்திக்க போகிறோம் என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால் அப்போது 3வது இடத்தில் களமிறங்கியிருந்த விராட் கோலி தோல்விக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இந்தியாவை நங்கூரத்தை போட்டு தூக்கி நிறுத்த முயற்சித்தார். அதற்கு எதிர்ப்புறம் வந்த ஹர்திக் பாண்டியாவும் நிதானமாக விளையாடி கை கொடுத்தார். அந்த வகையில் 7வது ஓவரில் சேர்ந்து 18 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி இந்தியாவை முழுமையாக காப்பாற்றி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.
இருப்பினும் கடைசி 8 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டதால் பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது ஹரிஷ் ரவூப் வீசிய 19.5வது பவுன்ஸ் பந்தை பின்னங்காலில் (ஃபேக் புட்) நின்று விராட் கோலி மைதானத்திற்கு நேராக அபார சிக்ஸரை பறக்க விட்டார். அதே வேகத்தில் அடுத்த பந்திலும் விராட் கோலி சிக்ஸர் அடித்ததால் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நவாஸ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 40 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்க அதற்கடுத்த பந்தில் டபுள் ரன்கள் எடுத்த விராட் கோலி இடுப்புக்கு மேலே வந்த 4வது பந்தில் அற்புதமான சிக்ஸர் அடித்தார். அதை நோ-பால் என்று அறிவித்த நடுவர்களிடம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும் தீர்ப்பு மாறாத நிலையில் அடுத்த பந்திலேயே விராட் கோலி கிளீன் போல்ட்டானார். ஆனால் அது ஃபிரீ ஹிட் என்பதை உணர்ந்த விராட் கோலி கொஞ்சமும் தாமதிக்காமல் வேகமாக ஓடி 3 ரன்கள் எடுத்தார். மறுபுறம் அந்த விதிமுறை கூட தெரியாத பாகிஸ்தான் வீரர்கள் நடுவர்களிடம் மீண்டும் வாக்குவாதம் செய்தனர். அதன் பின் ஒயிட் போல வந்த அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாகி விராட் கோலியின் போராட்டத்தை வீணடிக்க தெரிந்தார்.
ஆனால் அடுத்ததாக வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதே ஒயிட் வலையில் சிக்காமல் ஒதுங்கி நின்று அடிக்காமலேயே இந்தியாவுக்கு 1 ரன்னை பெற்றுக் கொடுத்தார். இறுதியில் கடைசி பந்தை தூக்கி அடித்து சிங்கிள் எடுத்த அவர் 82* (53) ரன்கள் குவித்து போராடிய விராட் கோலியின் போராட்டத்தை வீணடிக்காமல் இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
அந்த வகையில் மெல்போர்ன் நகரில் விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி பாகிஸ்தானை அடக்கி கைநழுவிச் சென்ற அசாத்தியமான வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்தியாவை அவமானத்திலிருந்து காப்பாற்றினர். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய விராட் கோலியை இந்திய அணியிலிருந்தே நீக்க வேண்டும் என்று விமர்சனங்கள் காணப்பட்டன.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு பதிலா அந்த இளம்வீரரை துவக்கவீரரா விளையாட வையுங்க – இயான் பிஷப் விருப்பம்
அந்த விமர்சனங்களையும் அடித்து நொறுக்கிய விராட் கோலி தன்னுடைய கிங் என்ற அரியாசனத்தில் மீண்டும் மகுடம் சூடினார். அத்துடன் ஹரிஷ் ரவூப்க்கு எதிராக 19.5வது பந்தில் விராட் கோலி அடித்த சிக்ஸர் “21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட்” என்று ஐசிசி பாராட்டியது மொத்த இந்தியர்களையும் பெருமடைய வைத்தது.