சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது நான்காவது தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் புள்ளி பட்டியலிலும் பெங்களூரு அணி தற்போது இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.
உலகின் முதல் வீரராக விராட் கோலி நிகழ்த்திய வரலாற்று சாதனை :
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 231 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து வெளி ஆடுகளங்களில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிநடை போட்டு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி பயணம் இந்த தோல்வியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அந்த அணியின் துவக்க வீரராக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 25 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 43 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் இந்த போட்டியில் அடித்த 7 பவுண்டரிகளின் மூலம் டி20 வரலாற்றில் மாபெரும் ஒரு சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
அதுகுறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று அவர் அடித்த 7 பவுண்டரிகளின் மூலம் பெங்களூரு அணிக்காக மட்டும் இதுவரை 800 பவுண்டரிகளை அடித்துள்ளார். இப்படி டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 800 பவுண்டரிகளை ஒரு வீரர் அடிப்பது இதுவே முதல்முறை. இதன்மூலம் ஒரே அணிக்காக அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்கிற வரலாற்று சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : 94 ரன்ஸ் அடிச்சதெல்லாம் பத்தாது.. நான் இன்னும் நிறைய செய்ஞ்சிருக்கனும் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 264 போட்டிகளில் விளையாடி 62 அரைசதம் மற்றும் 8 சதம் என 8552 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



