
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை அவர் விளையாட விரும்புவதால் வரும் ஒவ்வொரு தொடருமே அவருக்கு முக்கியமான தொடராகவே அமைந்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அவரது ஆட்டம் மிகப் பிரமாதமாக இருந்தது.
குறிப்பாக முதல் போட்டியின் போது 93 ரன்கள் அடித்து மிக அருகில் வந்து சதத்தை தவற விட்டிருந்தாலும் நேற்று இந்தூர் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது 108 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 124 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் குறிப்பிட்ட சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை தாண்டி உலக சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அப்படி அவர் நிகழ்த்திய உலக சாதனை யாதெனில் :
சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை வெவ்வேறு மைதானங்களில் சதம் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். சச்சின் டெண்டுல்கர் உலகில் உள்ள 34 மைதானங்களில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்த வேளையில் தற்போது வெவ்வேறு 35 மைதானங்களில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து விராட் கோலி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.
இதையும் படிங்க : உண்மையில் இந்தியாவில் இதை செய்ததில் மகிழ்ச்சி.. ஒருநாள் தொடர் வெற்றி குறித்து – நியூசி கேப்டன் பேட்டி
மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அனைத்து வகையான ஃபார்மேட்டையும் சேர்த்து 10 சதங்களுடன் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை நிகழ்த்தியுள்ளார். இப்படி பிரமாதமான சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.