சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு 2009 முதல் ஹால் ஆஃப் ஃபேம் எனும் ஸ்பெஷல் விருதை ஐசிசி வழங்கி கௌரவித்து வருகிறது. தற்போது அந்த விருதை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர் அலஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீத்து டேவிட் ஆகியோர் பெற உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
அதில் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் ஏபி டீ வில்லியர்ஸ் தாம் பார்த்த வீரர்களிலேயே அதிக திறமையுடைய வீரர் என்று இந்திய வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சுனில் நரேனுக்கு எதிராக அவர் அற்புதமான விளையாடிய ஆட்டத்தையும் விராட் கோலி நினைவு கூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது பற்றி விராட் கோலி ஐசிசி இணையத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.
திறமையான டீ வில்லியர்ஸ்:
“இந்த இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஹால் ஆஃப் ஃபேம் என்பது விளையாட்டில் உங்கள் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. மக்கள் எப்போதும் உங்கள் திறனைப் பற்றி பேசுகிறார்கள். அது சரிதான். நான் விளையாடியதிலேயே நீங்கள் மிகவும் திறமையான நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர்”
“2016ல் கொல்கத்தாவில் ஆர்சிபிக்காக நாம் ஒன்றாக பேட்டிங் செய்ததை விட சிறந்த உதாரணம் என் மனதில் இல்லை. மோர்க்கெல், ஷாகிப், சுனில் நரேன், ரசல் ஆகியோருக்கு எதிராக நாம் அன்று 184 ரன்களை துரத்தினோம். அப்போது சுனில் நரேனுக்கு எதிராக சரியாக அடிக்கத் தடுமாறுவதாக என்னிடம் நீங்கள் சொன்னீர்கள்”
விராட் கோலி வாழ்த்து:
“அதற்கு சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை என்னிடம் கொடுங்கள் நான் அவருக்கு எதிராக சிக்சர் அடிக்கிறேன் என்று சொன்னேன். அதனால் அவர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் நீங்கள் சிங்கிள் எடுத்து எனக்கு ஸ்ட்ரைக்கை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்களோ ஸ்லாக் ஸ்வீப் வாயிலாக 94 மீட்டர் சிக்ஸரை அடித்தீர்கள். அதனால் அந்த இடைவெளிக்குள் உங்களுக்கு என்னவாயிற்று? என்று நான் வியந்தேன்”
இதையும் படிங்க: ஆஸியில் ரோஹித் விலகினால் ராகுலுக்கு பதில் அவரை ஓப்பனிங்கில் களமிறக்கலாம்.. சஞ்சய் மஞ்ரேக்கர் பேட்டி
“நம்மால் அடிக்க முடியும் என்று உங்களையே நீங்கள் நம்பினீர்கள். அப்போது உங்களிடம் நீங்கள் வெறித்தனமானவர் என்று சொன்னது நினைவிருக்கிறது” எனக் கூறினார். மேலும் 2015 டெல்லி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்ப்பதற்காக 297 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த டீ வில்லியர்ஸ் உண்மையான பேட்ஸ்மேனுக்கு எடுத்துக்காட்டாக விளையாடியதாகவும் விராட் கோலி பாராட்டியுள்ளார். அது போக இன்னும் சில திறமைகளையும் நினைவுகளையும் பகிர்ந்துள்ள விராட் கோலி அவரை தனது “பிஸ்கட்” என்று அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



