ஆஸ்திரேலியாவில் வரும் நவம்பர் மாதம் இந்தியா விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விலக உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அப்படி விலகினால் அவருக்கு பதிலாக யார் கேப்டனாக செயல்படுவார் என்பது கேள்வியாக இருக்கிறது.
அதே போல துவக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அது போன்ற சூழ்நிலையில் கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாட வாய்ப்புள்ளது. ஏனெனில் ராகுல் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தியுள்ளார்.
ரோஹித்துக்கு பதில்:
அதே போல 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியில் சுப்மன் கில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில் ஒருவேளை ரோகித் சர்மா விலகினால் அதற்கு பதிலாக சுப்மன் கில் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நான் கேஎல் ராகுலை ஓப்பனிங்கில் களமிறக்க மாட்டேன். ஏனெனில் அவர் நீண்ட காலமாக அந்த இடத்தில் விளையாடவில்லை. சமீப காலங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் விளையாடினார். அதே சமயம் ஓப்பனிங் வீரராக களமிறங்கி அவர் சில சதங்களையும் அடித்துள்ளார்”
சுப்மன் கில் சரியான தேர்வு:
“இருப்பினும் அவரை நான் மிடில் ஆர்டரில் விளையாட வைக்க விரும்புகிறேன். சுப்மன் கில் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவர் துவக்க வீரராக விளையாடலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல கே.எல். ராகுல் சமீப வருடங்களாகவே மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். எனவே உடனடியாக ஆஸ்திரேலியாவில் புதிய பந்தில் விளையாடுவது அவருக்கு சவாலாக இருக்கலாம்.
இதையும் படிங்க: ஆண்டர்சன் மிஸ் பண்ணிட்டாரு.. சச்சின் வாழ்நாளில் செய்யாத சாதனையை ரூட் நிகழ்துவாரு.. குக் நம்பிக்கை
மறுபுறம் சமீப காலங்களில் சுப்மன் கில் 3வது இடத்தில் விளையாடி வருவதால் ஒரு போட்டியில் மட்டும் ஓப்பனிங்கில் களமிறங்குவது சரியான முடிவாக இருக்கலாம். இதையடுத்து கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



