
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று ராஞ்சி நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்களை குவித்தது.
பின்னர் 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடியிருந்தாலும் இறுதியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 332 ரன்களை மட்டுமே குவித்தது. அதனால் இந்திய அணியானது 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரரான விராட் கோலி 120 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 135 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
நேற்றைய போட்டியில் அவர் அடித்த சதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 52-ஆவது சதமாக பதிவாகியது. இதன்மூலம் பல்வேறு சாதனைகளை படைத்த விராட் கோலி முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மேலும் ஒரு சாதனையையும் நெருங்கி வருகிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்தவகையில் விராட் கோலி நெருங்கும் சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் 76 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று முதலிடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : அவரோட விக்கெட் தான் டர்னிங் பாய்ண்ட்.. இந்தியாவை வெற்றி பெற வைத்த திட்டம் பற்றி.. குல்தீப் பேட்டி
அவருக்கு அடுத்து விராட் கோலி நேற்றைய போய்ட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதோடு சேர்த்து மொத்தம் 70 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் 6 ஆட்டநாயகன் விருதினை வென்றால் அவர் சச்சினின் சாதனையை சமன் செய்வார். அதோடு அடுத்த 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை அவர் விளையாடும் பட்சத்தில் சச்சினை முந்தவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.