IPL 2023 : நேரலையில் அத்து மீறிய மெகா சண்டை – விராட் கோலி, கம்பீர், நவீனுக்கு ஐபிஎல் நிர்வாகம் தனிதனியே பெரிய தண்டனை

- Advertisement -

அனல் பறக்கும் போட்டிகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் அந்த போட்டியின் முடிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் ஆப்கானிஸ்தானின் இளம் வீரர் நவீன்-உல்-ஹக் நேருக்கு நேராக மோதிக் கொண்டதும் அதற்கு லக்னோ அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்ததும் மிகப்பெரிய சர்ச்சையாக மாறி ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 127 ரன்கள் துரத்தும் போது முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 77/8 என சரிந்த லக்னோவை 9வது விக்கெட்டுக்கு அமித் மிஸ்ராவுடன் இணைந்து 26 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நவீன்-உல்-ஹக் 17வது ஓவரின் ஒரு பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் மற்றொரு பந்தில் ரன் எடுக்க முயற்சித்த அவர் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் கோபத்துடன் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். அதனால் அதிருப்தியடைந்த நவீனுக்கும் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டது.

- Advertisement -

அதிரடி தண்டனை:
இருப்பினும் அமித் மிஸ்ரா மற்றும் நடுவர் ஆகியோர் உள்ளே புகுந்து இருவரையும் சமாதானப்படுத்தியதால் போட்டி நடைபெற்று முடிந்தது. ஆனால் போட்டியின் முடிவில் இரு அணி வீரர்களும் கை கொடுத்து செல்லும் போது மீண்டும் ஏதோ சில வார்த்தைகளை விராட் கோலி பேசியதால் நவீன்-உல்-ஹக் கோபமடைந்தார். அப்போது கிளன் மேக்ஸ்வெல் உள்ளே புகுந்து இருவரையும் தடுத்து நிறுத்தினார். அதை விட இந்த அனைத்தையும் பெவிலியினில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கௌதம் கம்பீர் கை கொடுத்து முடித்த பின் விராட் கோலியுடன் பேசிக்கொண்டிருந்த கெய்ல் மேயர்ஸை அப்புறப்படுத்தி விட்டு தனது ஸ்டைலில் சண்டையில் ஈடுபட்டார்.

குறிப்பாக 2013இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய போது சண்டை போட்ட அவர் தற்போது லக்னோ அணியின் பயிற்சியாளராக கொஞ்சமும் மாறாமல் பழைய பகையுடன் விராட் கோலியுடன் நேருக்கு நேராக மோதினர். அப்போது இரு அணி வீரர்களும் தடுத்ததால் சண்டையை பெரிதாக பார்த்துக் கொண்டனர். அது போக போட்டியின் முடிவில் லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் நண்பனாக விராட் கோலியை சமாதானப்படுத்தி அந்த வழியாக வந்த நவீனை பேசுவதற்கு அழைத்தார். அப்போது விராட் கோலியும் பகையை மறந்து கை கொடுக்க கை நீட்டிய போது பேசுவதற்கு எதுவுமில்லை என்று நவீன் மறுப்பு தெரிவித்து சென்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

மொத்தத்தில் இரு அணிகளை சேர்ந்தவர்கள் இப்படி மோசமான சண்டையில் ஈடுபட்டது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 3 முறை அரை மணி நேரத்திற்கு மேலாக மோதிக்கொண்ட அந்த 3 பேரின் செயலை போட்டியின் முடிவில் அம்பயர்கள் ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம் 2.21 அடிப்படை விதிமுறையை மீறிய அந்த 3 பேருக்கும் தனித்தனியான தண்டனைகளை வழங்கியுள்ளது.

அதன் படி நவீன்-உல்-ஹக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருடன் மோதிய விராட் கோலிக்கு இப்போட்டியின் 100% சம்பளமும் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் விராட் கோலி சம்பளமாக பெறும் 1.07 கோடிகளையும் அபராதமாக செலுத்த உள்ளார். அதே போல பயிற்சியாளராக இருந்து சண்டையை அமைதிப்படுத்த வேண்டிய கௌதம் கம்பீர் அதை விட்டு விட்டு விராட் கோலியுடன் சண்டையில் ஈடுபட்டதால் அவருக்கும் இப்போட்டியின் 100% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:IPL 2023 : நம்ம ஆர்.சி.பி டீமா இது? 16 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட அசத்தல் சாதனை – விவரம் இதோ

அதன் படி இப்போட்டியின் சம்பள தொகையான 25 லட்சத்தை கௌதம் கம்பீர் அபராதமாக செலுத்த உள்ளார். அதே போல் சீனியர் என்று பாராமல் விராட் கோலியுடன் மோதிய நவீனுக்கு இந்த போட்டியிலிருந்து 50% அதாவது 1.79 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேருமே அதை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடத்தப்படாது என்று ஐபிஎல் நிர்வாகம் கூறுகின்றது.

Advertisement