ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி நடைபெற்ற 64வது லீக் போட்டியில் லக்னோவை 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரேல் 58, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்கள் நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து சேசிங் செய்த லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே கே.எல். ராகுல் 5, குவிண்டன் டீ காக் 12, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 ரன்களில் இஷாந்த் சர்மா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் மிடில் ஆடரில் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக 61 (27), கடைசி நேரத்தில் அர்சத் கான் 58* (33) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் லக்னோ 189/9 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
ஆட்டநாயகன் இஷாந்த்:
அதன் காரணமாக லக்னோ அணி தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. அதே போல 14 போட்டிகளில் 7 வெற்றியை மட்டுமே பெற்றதால் டெல்லி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மூத்த இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் நக்குல் பந்தை வைத்து கடந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கிய தாம் இப்போட்டியில் கேஎல் ராகுலை அவுட்டாக்கியதாக இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2 தரமான வீரர்களை இப்போதும் அவுட்டாக்கிய தமக்கு வேறு எதுவும் பெரிதாக இருக்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் காயத்தின் போது உதவிய பயிற்சியாளர் பட்ரிக் ஃபர்ஹத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“கடந்த சில போட்டிகளில் நான் நக்குல் பந்துகளை வீச முயற்சித்து வருகிறேன். கடந்த போட்டியில் விராட் கோலியை அவுட்டாக்கிய நான் இன்று கேஎல் ராகுலை அவுட்டாக்கினேன். அதை தவிர்த்து நான் அதிகமாக எதுவும் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு நாளும் வரும் சவால்களை எதிர்கொள்கிறேன். என்னுடைய உடல் நன்றாக இருக்கிறது. அதற்கு நான் பட்ரிக் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் எனக்கு சில காயங்கள் இருந்தது”
இதையும் படிங்க: 19 ரன்ஸ்.. போராடிய லக்னோவை வீழ்த்திய டெல்லி.. ஆனால் பிளே ஆஃப் கிடைக்காது.. நூலிழையில் தப்பிய சிஎஸ்கே?
“தோல்விகளை சந்தித்த போது நாங்கள் நேர்மறையாக தன்னம்பிக்கையுடன் இருந்தோம். நெருக்கமான போட்டிகளில் நீங்கள் வெல்லும் போது உங்களுக்கு முன்னோக்கி செல்வதற்கான தன்னம்பிக்கை தாமாக கிடைக்கும்” என்று கூறினார். இந்த நிலையில் ஹைதராபாத் அணி அதனுடைய கடைசி 2 போட்டிகளில் சேர்த்து 194 ரன்களுக்கும் மேல் தோல்வியை சந்தித்தால் மட்டுமே டெல்லி அணி பிளே ஆஃப் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.