19 ரன்ஸ்.. போராடிய லக்னோவை வீழ்த்திய டெல்லி.. ஆனால் பிளே ஆஃப் கிடைக்காது.. நூலிழையில் தப்பிய சிஎஸ்கே?

DC vs LSG 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் 64வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ஜேக் பிரேசர்-மெக்கர்க் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் போரேல் அதிரடியாக விளையாடினார்.

அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த சாய் ஹோப் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 38 (27) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய அபிஷேக் போரேல் அரை சதமடித்து 58 (33) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 33 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

டெல்லி வெற்றி:
ஆனால் அடுத்ததாக வந்த ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் கடைசிக்கட்ட ஓவர்களில் லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி அரை சதமடித்து 57* (25) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அக்சர் பட்டேல் 14* (10) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் டெல்லி 208/4 ரன்கள் எடுத்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 209 ரன்களை துரத்திய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுலை 5 ரன்களில் அவுட்டாக்கிய இஷாந்த் சர்மா மற்றொரு அதிரடி துவக்க வீரர் குவிண்டன் டீ காக்’கை 12 ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 5 ரன்னில் அக்சர் படேல் சுழலில் ஸ்டப்பிங்கானார். அதனால் 24/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய லக்னோ அணிக்கு அடுத்ததாக வந்த தீபக் ஹூடாவும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் டெல்லி பவுலர்களை அடித்து நொறுக்கி வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் ஆயுஸ் பதோனி 6 (9) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய பூரான் 61 (27) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த க்ருனால் பாண்டியா 18 (18) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் லக்னோவின் தோல்வி உறுதியான நிலையில் 8வது இடத்தில் அர்சத் கான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் அரை சதமடித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் மீண்டும் எதிர்புறம் யுவ்திர் சிங் 14 (7), ரவி பிஸ்னோய் 2 ரன்களில் அவுட்டாகி கைகொடுக்கத் தவறினர். அதனால் அர்சத் கான் 58* (33) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 189 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

டெல்லி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி தங்களுடைய 14 போட்டிகளில் முடிவில் 7வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் சென்னை (+0.528) மற்றும் ஹைதராபாத்தை (+0.406) விட குறைவான ரன் ரேட் கொண்டுள்ளதால் அந்த அணி 5வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: அடுத்த வருடம் கொல்கத்தா அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுகிறாரா? மீட்டிங் பற்றி வெங்கி மைசூர் பதில்

அதனால் ஹைதராபாத் அதனுடைய கடைசி 2 போட்டியிலும் சேர்த்து 194 ரன்கள் வித்யாசத்தில் தோற்றால் மட்டுமே பிளே ஆஃப் முடியும் என்று சோகமான அசாத்திய நிலைக்கு டெல்லி தள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போட்டியில் வென்றும் டெல்லியின் பிளே ஆஃப் வாய்ப்பு 99% கேள்விக்குறியாகவே உள்ளது. மறுபுறம் 13 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த லக்னோவின் பிளே ஆஃப் வாய்ப்பு 99% கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement