பும்ரா போல் காற்றில் பறந்த கிங் கோலி.. சூப்பர் ஓவரில் மாஸ் ஃபீல்டிங் செய்து இந்தியாவை காப்பாற்றியது எப்படி?

- Advertisement -

பெங்களூருவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா இரட்டை சூப்பர் ஓவரில் போராடி வென்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 22/4 என்ற சுமாரான துவக்கத்தை பெற்றாலும் கடைசியில் ரோகித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் சேர்த்தது.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் குர்பாஸ் 50, கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் நைப் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் ரோகித் சர்மா அதிரடியுடன் இந்தியா நிர்ணயித்த 12 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் ரவி பிஸ்னோய்க்கு எதிராக 2 விக்கெட்டுகளை இழந்து தோற்றது.

- Advertisement -

ஃபீல்டிங் கிங் கோலி :
அதனால் 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் விராட் கோலி பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் பேட்டிங் செய்ய வந்த போது ரசிகர்கள் உச்சகட்ட ஆதரவை கொடுத்தனர்.

இருப்பினும் முதல் பந்திலேயே டக் அவுட்டான அவர் தம்முடைய கேரியரிலேயே முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் இப்போட்டியில் 212 ரன்கள் துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு வாஷிங்டன் சுந்தர் வீசிய 17வது ஓவரின் 5வது பந்தில் கரீம் ஜானத் அதிரடியான சிக்சர் பறக்க விட்டார். அதை பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த விராட் கோலி பந்தை சரியாக கவனித்து காற்றில் தாவி பிடித்து மைதானத்திற்குள் தூக்கி எறிந்து சிக்ஸரை தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

அதை ரிப்ளையில் ஸ்லோ மோஷனில் பார்க்கும் போது பும்ரா பந்து வீசினால் எப்படி இருக்குமோ அதே போல விராட் கோலி பந்தை பிடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அத்துடன் 19வது ஓவரில் நஜிபுல்லா ஜாட்ரான் கொடுத்த கடினமான கேட்ச்சை ரன்னிங்கிலேயே துல்லியமாக பிடித்த விராட் கோலி முதல் சூப்பர் ஓவரில் குல்பதின் ஃநைபை ரன் அவுட் செய்ய உதவினார்.

இதையும் படிங்க: 2 ஆவது சூப்பர் ஓவரை ரவி பிஷ்னாய்க்கு ரோஹித் சர்மா குடுக்க காரணம் இதுதானா? – ராகுல் டிராவிட் கொடுத்த விளக்கம்

அந்த வகையில் இப்போட்டியில் டக் அவுட்டானாலும் ஃபீல்டிங் துறையில் கில்லியாக செயல்பட்ட விராட் கோலி இந்தியாவின் வெற்றியில் கடைசி நேரங்களில் முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement