- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவமானத்திலும் சப்போர்ட் பண்ண அவங்களுக்கு இந்த சதத்தை டெடிகேட் செய்கிறேன் – விராட் கோலி நெகிழ்ச்சி

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் விமர்சனங்களை சந்தித்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இந்த தொடரில் 35, 59*, 60, 0 என நல்ல ரன்களைக் குவித்து ஓரளவு பார்முக்கு திரும்பியது ஒரே ஆறுதலாக அமைந்தது.

ஆனால் அந்த ஆறுதல் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறும் அளவுக்கு வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் அனைவரும் கேட்ட சதத்தை அடித்து விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய விராட் கோலி 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 122* (61) ரன்களை 200 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 20 ஓவர்களில் 212/2 ரன்கள் சேர்க்க உதவினார். அதைத் துரத்திய ஆப்கானிஸ்தான் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 20 ஓவர்களில் வெறும் 111/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

வேதனைக்கு முற்றுப்புள்ளி:
அதனால் 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா ஆறுதல் வெற்றியுடன் இந்த தொடரை நிறைவு செய்தது. அந்த வகையில் இந்த தொடரின் கோப்பையை இழந்தாலும் கடந்த 10 வருடங்களாக சச்சினுக்கு பின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி பழைய ஃபார்முக்கு திரும்பியது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஜாம்பவானுக்கு நிகராக சாதனை படைத்து 2019க்குப்பின் 50, 70 போன்ற ரன்களை அவ்வப்போது அடித்த போதிலும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஃபார்ம் அவுட்டாகி விட்டார் என்று அச்சிடப்படாத முத்திரையுடன் அணியிலிருந்து அவரை நீக்க சொல்லும் அளவுக்கு கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.

ஏற்கனவே பணிச்சுமையால் திண்டாடிய அவருக்கு முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் மேலும் வலியை ஏற்படுத்தியது. ஆனாலும் சாம்பியன் வீரரான அவர் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் களமிறங்கி 1020 நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் சதத்தையும் ஒட்டுமொத்தமாக 71வது சதத்தையும் விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த சோதனை காலங்களிலும் தன்னை மனம் தளர விடாமல் தனது பின்புறம் நின்று புத்துணர்ச்சியுடன் இயங்குவதற்கு உதவியாக மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகா ஆகியோர் இருந்ததாக சதத்தை அடித்த பின் தெரிவித்த விராட் கோலி அவர்களுக்காக இந்த சதத்தை சமர்ப்பணம் செய்வதாகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் நான் சதமடித்ததில்லை என்பதால் இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. கடந்த இரண்டரை வருடங்கள் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. விரைவில் நான் 34 வயதை தொடுவதால் சதத்தை அடித்த பின் ஆக்ரோசமாக கொண்டாடுவது கடந்த காலங்களுடன் முடிந்து போய்விட்டது. நீங்கள் பார்க்கும் நான் இங்கே நிற்பதற்கு ஒருவர் தான் எனக்கு அனைத்து ஆதரவுகளையும் கொடுத்தார். அவர் தான் அனுஷ்கா. இந்த சதம் அவர் மற்றும் எங்கள் சின்ன குழந்தை வாமிகா ஆகியோருடையது”

“இந்த மோசமான காலங்களில் எப்போதும் என்னுடன் நின்ற அனுஷ்கா மற்றும் மகள் வாமிகா ஆகியோருக்கு இந்த சதத்தை சமர்ப்பிக்கிறேன். இந்த காலங்களில் வெளியே நிறைய சத்தங்கள் இருந்தாலும் அணிக்குள் அனைவரும் வரவேற்று எப்போதும் ஆதரவு கொடுத்தனர். மேலும் இந்த தொடரில் களமிறங்கிய போது தீவிரமாக சதமடிக்க வேண்டும் என்று நான் முயற்சிக்கவில்லை. ஏனெனில் கடவுள் எனக்கு ஏற்கனவே கடந்த காலங்களில் நிறைய கொடுத்துள்ளார். எனவே ஓய்வுக்குப்பின் என்னுடைய அணிக்காக முடிந்தளவுக்கு பாடுபட முயற்சிக்கிறேன். இருப்பினும் சமீபத்திய நாட்களில் வலைப் பயிற்சி செய்யும் போது என்னுடைய அந்தப் பழைய பார்ம் வந்ததை உணர்ந்தேன்” என்று கூறினார்.

- Advertisement -
Published by